ஓர் ஆண்டில் வருவாய் ரூ.680 தானா? – மத்திய அமைச்சரின் பிரமாணப் பத்திர விவரத்தை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் தேர்தல் பிரமாணப்பத்தித்தில் ஏதாவது தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்குமாறு மத்திய நேரடி வரி வாரியத்துக்கு (Central Board of Direct Taxes) தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேர் தேர்தல் பிரமாணபத்திரத்தில் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பு, அவரின் உண்மையான சொத்து மதிப்புடன் பொருந்திப்போகவில்லை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்திருந்தது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “புகாரின் அடிப்பைடையில் மத்திய அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரமாணப்பத்திரத்தில் ஏதாவது தவறான தகவல்கள் இருக்கிறதா என்று சரிபார்க்குமாறு மத்திய நேரடி வரி வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரமாணப் பத்திரத்தில் ஏதாவது பொருந்ததாத தகவல் அல்லது தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

சட்டப்படி, நியமனப் பத்திரம் அல்லது பிரமாணப் பத்திரத்தில் ஏதாவது தவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ அல்லது தவறாக தெரிவிக்கப்பட்டிருந்தாலோ, ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

புகார் விவரம் என்ன? – மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 2021-22-ம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.680 என வேட்புமனுவில் தெரிவித்துள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. தனக்கு அசையும் சொத்துகளாக ரூ.9.26 கோடியும், அசையா சொத்துகளாக ரூ.14.4 கோடியும், தனது மனைவியின் பெயரில் ரூ.12.47 கோடி சொத்தும் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதேநேரம், 2021-22ம் நிதியாண்டில் தனது வரிக்குரிய வருமானம் ரூ.680 என தேர்தல் பிராமணப் பத்திரத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

பிராமணப் பத்திரத்தில் 2018-19-ல் ரூ.10.8 கோடியும், 2019-20-ல் ரூ.4.5 கோடியும், 2020-21-ல் ரூ.17.5 லட்சமும், 2021-22-ல் ரூ.680-ம், 2022-23-ல் ரூ.5.59 லட்சமும் வருமானம் கிடைத்தாக தெரிவித்துள்ளார். ஆனால், 2021-22 ஆண்டு சமயத்தில் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவரது வருமானம் ரூ.680 குறிப்பிட்டிருப்பது பொய் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், ராஜீவ் சந்திர சேகர் வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது காங்கிரஸ்.

திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் அதன் தற்போதைய எம்.பி.யான காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் அக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.