கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராக போட்டியிடும் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், பிரசித்தி பெற்ற கோயிலான அழகு முத்து அய்யனார் கோயிலுக்குச் சென்றார். அப்போது அங்கு மரத்தடியில் அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் சென்ற தங்கர் பச்சான், `இந்த தேர்தலில் நான் வெற்று பெறுவேனா என்று பார்த்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டார். உடனே, `என் கிளி முக்காலத்தையும் துல்லியமாக சொல்லிவிடும்’ என்று கூறிய ஜோசியக்காரர், கூண்டிலிருந்த கிளியை வெளியே அழைத்து தங்கர் பச்சான் பெயருக்கு ஒரு அட்டையை எடுத்துத் தருமாறு கூறினார். ஒன்றன் பின் ஒன்றாக பல அட்டைகளை எடுத்து கீழே போட்ட கிளி, ஒரு அட்டையை மட்டும் ஜோசியக்காரரிடம் கொடுத்துவிட்டு கூண்டுக்குள் சென்றுவிட்டது.

அந்த அட்டையை பிரித்த ஜோசியக்காரர் அதிலிருந்த அய்யனார் படத்தை பார்த்து, `அய்யனார் ஆசி வழங்கிவிட்டார். உங்களுக்கு வெற்றி உறுதி’ என்று கூறினார். அதைக் கேட்டு மகிழ்ச்சியான தங்கர் பச்சான், அழகு முத்து அய்யனாரை வணங்கிவிட்டு, பிரசாரத்தை தொடங்கினார். தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராலனது. ஒருபுறம் தங்கர் பச்சானுக்கு வாழ்த்துகள் குவிய, மறுபுறம் பச்சைக் கிளியை கூண்டில் அடைத்து வளர்ப்பதற்கு வனத்துறை அனுமதிக்கிறதா என்று விமர்சனங்களும் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக தென்னம்பாக்கம் அழகர் கோயிலில் கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ஜோசியக்காரர்களை அதிரடியாக கைது செய்த வனத்துறை, அவர்களிடமிருந்து நான்கு கிளிகளை மீட்டது. அத்துடன், கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்திருக்கிறது. இந்த கைதுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY