மகாராஷ்டிராவில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் நடக்கும் ஐந்து தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே நேற்று பண்டாரா தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு, காரில் திரும்ப வந்து கொண்டிருந்தார். அவருடன் பண்டாரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரசாந்த் பட்டோலேயும் இருந்தார். கார் பண்டாரா அருகில் உள்ள பில்வாரா என்ற கிராமத்தில் வந்தபோது, பின்புறமாக வந்த லாரி ஒன்று பட்டோலேயின் கார்மீது மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக நானா பட்டோலே லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நானா பட்டோலே தனது கார்மீது லாரி மோதியது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “லாரி டிரைவர் திட்டமிட்டு கார்மீது விபத்தை ஏற்படுத்தி இருப்பது போன்று தான் தெரிகிறது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நடந்தது விபத்தா அல்லது என்னை கொலை செய்ய முயற்சி நடந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ”மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலேயை கொலைசெய்ய முயற்சி நடந்துள்ளது. பட்டோலேயின் கார்மீது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு மீது கேள்வி எழுந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் பட்டோலேயின் காரை நொறுக்க முயன்றுள்ளார். இதில் பட்டோலேயை கொலை செய்ய முயற்சி நடந்ததா என்ற கேள்வி எழுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை முடித்துவிட்டு பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற விரும்புகிறதா?” என்று அவர் கேட்டுள்ளார்.