டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்.பி சஞ்சய் சிங், சந்திரசேகர ராவின் மக்கள் கவிதா ஆகியோரைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, கடந்த மாதம் அமலாக்கத்துறை கைதுசெய்தது. இதில், சஞ்சய் சிங் கடந்த வரம் ஜாமீனில் வெளிவந்த நிலையில், மற்ற மூவரும் திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

சிறையிலிருந்தாலும் முதல்வராக நீடித்துவரும் கெஜ்ரிவாலை, `மதுபானக் கொள்கை ஊழலின் மூளையே இவர்தான்’ என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இன்னொருபக்கம், பா.ஜ.க-வில் சேர்ந்தால் தன் அரசியல் வாழ்க்கை காப்பாற்றப்படும் என்றும், அப்படிச் சேரவில்லையென்றால் ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறை கைதுசெய்யும் என்றும் பா.ஜ.க தரப்பிலிருந்து மிரட்டல் வந்ததாக ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இருப்பினும், கெஜ்ரிவால் கைதுக்குப் பிறகு ஆம் ஆத்மியிலிருந்து அமைச்சரோ, நிர்வாகியோ விலகவுமில்லை, பதவிகளை ராஜினாமா செய்யவுமில்லை.
இந்த நிலையில், அதில் முதல் நபராக டெல்லி சமூக நலன் மற்றும் எஸ்சி/எஸ்டி நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளோடு ஆம் ஆத்மி கட்சியிலிருந்து இன்று விலகியிருக்கிறார். இத்தனைக்கும், கடந்த ஆண்டு நவம்பரில்தான் சுங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் இவரின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு நடந்த அடுத்த ஐந்தாவது மாதத்தில், கெஜ்ரிவால் சிறையிலிருக்கும் வேளையில் ராஜ்குமார் ஆனந்த் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார்.

தன்னுடைய இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ராஜ்குமார் ஆனந்த், “ஊழலுக்கு எதிராகப் போராடத் தோன்றியது ஆம் ஆத்மி. ஆனால், இன்று அதுவே ஊழலில் சிக்கித் தவிக்கிறது. இந்த ஊழலில் என்னுடைய பெயரையும் இணைக்க முடியாது என்பதால், அமைச்சர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தேன்.
இன்று, நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். அன்று ஜந்தர் மந்தரில், அரசியல் மாறினால் நாடு மாறும் என்று கெஜ்ரிவால் கூறியதைக் கேட்டு அரசியலுக்கு வந்தேன். ஆனால், அரசியல் எதுவும் மாறவில்லை, அரசியல்வாதிகள்தான் மாறிவிட்டனர். இந்த சமூகத்துக்குத் திருப்பியளிக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் அமைச்சரானேன். எங்களிடம் 13 ராஜ்ய சபா எம்.பி-க்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களில் ஒருவர்கூட தலித் இல்லை.

அதுமட்டுமல்லாமல், தலித் எம்.எல்.ஏ, கவுன்சிலர்கூட ஆம் ஆத்மியில் இல்லை. தலித் தலைவர்கள் கட்சியின் தலைமைப் பதவிகளில்கூட நியமிக்கப்படுவதில்லை. பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுபவன் நான். அப்படியிருக்கும்போது, தலித்துகளுக்காக உழைக்க முடியாவிட்டால் கட்சியில் இருப்பதில் எந்த அர்த்தமுமில்லை” என்று கூறினார்.
இவர் இவ்வாறு கூறினாலும், பா.ஜ.க-வின் அழுத்தத்தால்தான் கட்சியிலிருந்து ராஜ்குமார் ஆனந்த் விலகியதாக, ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.