பினராயி விஜயன் மகள் மாதப்படி வாங்கிய வழக்கு; CMRL கம்பெனி எம்.டி-க்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி (சி.எம்.ஆர்.எல்) அலுவலகத்திலும், நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா என்பவரின் வீட்டிலும் இன்கம் டாக்ஸ் இன்வெஸ்டிகேசன் பிரிவு கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அதிரடி ரெய்டு நடத்தியது. அந்த ரெய்டில் ஒரு டயரி சிக்கியிருக்கிறது. அந்த டயரியில் ‘மாதப்படி’ என்ற கணக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த விபரங்கள் இருந்துள்ளன. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக்’ கம்பெனியின் பெயரும் இருந்துள்ளது. வீணா விஜயனின் கம்பெனிக்கு 2017-ம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் பணம் கொடுத்ததற்கான கணக்குகள் இருந்துள்ளன. அது குறித்து விசாரித்ததில், கேரள கடற்கரையில் கருமணல் தோண்டி எடுக்க பத்து ஆண்டுகளுக்கு மேலாக முயன்றுவரும் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் அப்டேட் செய்வதற்காக பல தவணையாக ஒரு கோடியே எழுபத்தி இரண்டு லட்சம் ரூபாய் வீணா விஜயனின் கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் அதுபோன்ற ஒரு சாஃப்ட்வேர் அப்டேட் அந்த கம்பெனியில் செய்யப்படவில்லை என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மாதப்படி குறித்த டயரி அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இதற்கிடையே கொச்சி அமலாக்கத்துறை வீணா விஜயன் மீது கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கு சம்பந்தமான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் பைனான்ஸ் பிரிவு அதிகாரி கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

சி.எம்.ஆர்.எல் கம்பெனி நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா

இந்த நிலையில் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை ஆஜராகும்படி சி.எம்.ஆர்.எல் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா-வுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் கம்பெனி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், தேவைப்பட்டால் வீணா விஜயனிடமும் விசாரணை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.