இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியாகவுள்ள ‘மா.பொ.சி’ படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் தமிழறிஞர் ம.பொ.சியின் பேத்தி, எழுத்தாளர் பரமேசுவரி.
அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “போஸ் வெங்கட் இயக்கத்தில் மா.பொ.சி என்றொரு போஸ்டரைப் பார்த்தேன். தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சியென்று நினைத்தேன். தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை நீங்கள் மதிக்கவே வேண்டாம்; ஆனால் ஏன் இப்படி அவமதிக்கிறீர்கள்? நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய கதையில்லையென்று சொல்லலாமா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த நிலையில், எழுத்தாளர் பரமேசுவரியைத் தொடர்புகொண்டு பேசினேன்.

“நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் இருப்பதற்கும், சென்னை தலைநகராக அமைந்ததற்கும் காரணமாக இருந்தவர் எனது தாத்தா ம.பொ.சி. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, பல பகுதிகளைத் தமிழ்நாட்டிற்குப் போராடிப் பெற்றார். தமிழ்நாட்டின் எல்லையை வகுத்துக்கொடுத்தவர், சிலப்பதிகாரத்தை மீட்டெடுத்தவர். வ.உ.சிக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெருமையைத் தந்தவர் என தாத்தாவுக்கு பல அடையாளங்களும் பெருமைகளும் உண்டு.
தமிழ்நாட்டிற்காகவும் தமிழ்மொழிக்காகவும் எண்ணிலடங்கா போராட்டங்களை முன்னெடுத்திருக்கார். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலில் தனிப்பட்ட வாழ்வு பற்றி 20 பக்கம்கூட இருக்காது. தமிழகத்தின் ஒரு காலகட்டத்து வரலாறே அவருடைய வரலாறாக விரியும். அப்படியொரு மகத்தான தலைவரை, தமிழ் தேசத் தந்தையின் பெயரை எங்களோட அனுமதியில்லாம பயன்படுத்தியிருக்காங்க. படக்குழுவுக்கு எங்களோட கண்டனத்தைத் தெரிவிச்சுக்கிறோம். இந்தத் தலைப்புக்கு எப்படி அனுமதி அனுமதிக்கொடுத்தாங்கன்னும் தெரியல.

மா.பொ.சி படக்குழு தலைப்பை ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’னு சொல்றாங்க. ஆனா, மாங்கொல்லை மயிலாப்பூரிலிருக்கும் ஒரு பகுதிதான். தாத்தாவின் பெயரான பொன்னுசாமி, பொன்னரசனாகியுள்ளது. கடைசிப் பெயர் சிவஞானம். எப்படிப் பார்த்தாலும் இது தாத்தா பெயர்தான். முகத்தில் மரு வைத்து மறைக்கப்பார்த்தாலும் மறைக்க முடியாதவர் தாத்தா.
உதாரணமா, ‘காந்தி’ன்னு படம் எடுத்தா, யாரோட முகம் நினைவுக்கு வரும்? அதேபோல, நேரு, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்ற பெயர்களில் படம் எடுத்தா, யார் முகம் ஞாபகம் வரும்? அப்படித்தான், தாத்தாவும். சமூகத்திற்காக உழைத்த தலைவர்களின் பெயர்களை படத்திற்குத் தலைப்பா வைக்க அனுமதிக்கக்கூடாது. மொழி, பண்பாடு, அரசியல் தளத்தில் தலைவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு மறந்துபோய், ம.பொ.சி-ன்னா படத்தோட தலைப்புன்னுதானே வருங்கால தலைமுறை நினைச்சுக்குவாங்க?
முக்கியமா, நாளையே தாத்தாவோட பயோபிக்கை எடுக்க நினைத்தா, நாங்க என்ன தலைப்பு வெக்கிறது? அதனாலதான், இந்தத் தலைப்புக்கு நாங்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தாத்தாவின் கருத்துகளோட முரண்படலாம். விமர்சிக்கலாம். ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு. ஆனா, அவருடைய பெயரைத் தவறான முறையில் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இது தாத்தாவை அவமானப்படுத்தும் செயல்” எனச் சொல்கிறார் பரமேசுவரி.
இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து, இயக்குநர் போஸ் வெங்கட்டை தொடர்புகொண்டு பேச முயன்றோம். மெசேஜும் அனுப்பினோம். ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவர், இதுகுறித்து விளக்கம் அளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.