தேர்தல் 2024: `தமிழ்நாடு டு இந்தியா… களம் யாருக்குச் சாதகம்?' – விவரிக்கும் ரவீந்திரன் துரைசாமி 

தேர்தல் களம் கோடை வெயிலுக்கும் மேல் அனல் கக்கும் நிலையில், கள நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ரவீந்திரன் துரைசாமியுடன் உரையாடிய நறுக் சுறுக் பேட்டி இதோ..!

தமிழகத்தில் தேர்தல் களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?  

“சந்தேகமே இல்லாமல் திமுக கூட்டணிக்குத்தான். திமுக கூட்டணியால் 35 சீட்களுக்கும் மேல் பெற முடியும் என உறுதியாக கூற முடியும். காரணம் 35 இடங்களுக்கும் மேல் திமுக-வுக்கு போட்டியே இல்லை என்ற நிலைதான் உள்ளது. திமுக-வின் அதிகார பலம், கொங்கு மண்டலத்தில் மநீம தலைவர் கமலின் பரப்புரை, அதிமுக வாக்களர்களுக்கு ராகுல் காந்தி மீது உண்டான மதிப்பு என எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, திமுக-வுக்கு 35 இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.” 

ஸ்டாலின் பிரசாரம்

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கான வெற்றி வாய்ப்பு?

“ராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மீது ஒரு சென்ட்டிமென்ட் இருக்கிறது அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்ததன் காரணமாகத்தான் அனிதா ராதாகிருஷ்ணனையும், கனிமொழியையும் அனுப்பி திமுக பரப்புரை மேற்கொள்கிறது. அனிதா ராதாகிருஷ்ணர் சிவாஜி ரசிகர்போல, பாரத விலாஸ் படத்தில் வரும் மத நல்லிணக்கப் பாடலைப் பாடி நவாஸ் கனிக்காக ஓட்டு கேட்கிறார்.

இரண்டாவது முறையாக நவாஸ் கனியை எம்.பி-யாக்க திமுக முயல்கிறது. எனவே ராமநாதபுரத்தில் திமுக-வுக்கு கடும் போட்டி இருக்கும். இதேபோன்று தருமபுரி, கன்னியாகுமரி, தேனி, கோயம்புத்தூர், வேலூர், பெரம்பலூர் என பல தொகுதிகளில் கடும் போட்டி இருக்கும். இந்த தொகுதிகளிலும் திமுக தனது அதிகார பலத்தை பயன்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர்களின் அதிகார பலத்திற்கு ஈடு கொடுக்கும் வேட்பாளரே வெற்றி பெறுவார்.” 

ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம்

மோடியின் ரோடு ஷோ தமிழகத்தில் எடுபடுமா? திமுக-வை மட்டுமே கடுமையாக தாக்கி பேசுவது தேர்தல் களத்தில் எதிரொலிக்குமா? 

“மோடி எப்போதுமே தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டார். தமிழ்நாட்டிலும் அப்படித்தான். இங்கு திமுக-வுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். எனவேதான், திமுக Vs பாஜக என ‘பொசிஷனிங்’ செய்கிறார். இதன் விளைவாக தங்கள் பரப்புரை எடுபடாமல் அதிமுக-வினர் சோர்ந்து விடுவார்கள்.

ராகுல் காந்தியை தூக்கிப் பிடிப்பதால், ஸ்டாலினை மோடி எதிரியாக நினைக்கிறார். அமலாக்கத்துறை தேர்தல் நெருங்க நெருங்க திமுக-வுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும். திமுக Vs பாஜக எனும் கருத்துருவாக்கம் பாஜக-வுக்கு எந்த அளவுக்கு லாபத்தைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.”

சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ

சமூகரீதியான வாக்குகள் எந்தெந்த கட்சிகளுக்குச் செல்லும்?

“பிராமண சமூகத்தின் வாக்குகள் ஒரு காலத்தில் அதிமுக-வுக்குச் சென்றதைப்போல், தற்போது பாஜக-வுக்குச் செல்லும். அதிமுக, பாஜக-வுக்கு வாக்களித்த குறிப்பிட்ட சமூகத்தினர் வாக்கு பல கட்சிகளுக்கும் சிதறும். செங்குந்தர், அகமுடையார், மீனவர், கொங்கு நாடார் போன்ற சமூகத்தினரில் இதுவரை திமுக, அதிமுக-வுக்கு வாக்களித்தவர்கள்… நாம் தமிழரை நோக்கி நகர்கிறார்கள். வெள்ளாள கவுண்டர்கள் எடப்பாடியை விட்டுவிடக் கூடாது என நினைக்கிறார்கள். 10.5 சதவிகித இட ஒதுக்கீடு காரணமாக வன்னியர்களும் இதையே நினைக்கிறார்கள்.

முக்குலத்தோருக்கு சசிகலா, தினகரன், பன்னீர்செல்வத்தை வைத்து எடப்பாடிமீது பெரும் கோபம் இருக்கிறது. ஒரு சர்வேயில் 35 சதவிகித நாடார்கள் வாக்களிப்பது குறித்து முடிவு செய்யவில்லை எனக் கூறி இருக்கிறார்கள். பறையர்கள் வாக்குகளை திருமாவளவன் மூலமாக திமுக அறுவடை செய்யும். சிறுபான்மையினர் வாக்குகள் திமுக-வுக்கே பெரும்பாலும் செல்லும். அதில் ஒரு பகுதி நாம் தமிழருக்கு செல்லும். தெலுங்கு, சவுராஷ்டிரா போன்ற பிற மொழி பேசுவோர் வாக்குகளும் பெரும்பாலும்  திமுக-வுக்கே செல்லும்.” 

சீமான்

நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தை மக்களிடம் சேர்த்து விட்டதா?

“நினைத்ததை விட விரைவாகவே சேர்த்து விட்டது. சின்னம் கிடைக்காதது, அவர்மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து  தனித்து தேர்தலை சந்திப்பதும் ஒரு தலைவராக அவர்மீது உள்ள இமேஜும் அவருக்குப் பெரும்பலம். சீமானின் பிரசார வலிமைதான் 6.3 சதவிகித வாக்கு வங்கி வரை அவரைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த தேர்தலில் இன்னும் அவரது வாக்கு வங்கி அதிகரிக்கும் எனவே தோன்றுகிறது. முதல் தலைமுறை வாக்களர்களின் ஆதரவும் சீமானுக்கு இருக்கிறது. அண்ணாமலையை துணிச்சலாக நேரடியாக விமர்சிப்பதும் சீமான் மட்டும்தான் என்பதையும் கவனிக்க வேண்டும்.”

அமித் ஷா – மோடி

தேசிய அளவில் பாஜக-வின் வியூகம் என்ன… எவ்வளவு இடங்கள் பெறுவார்கள்? 

“பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக-வினர் பெரும் வெற்றி பெறுவார்கள். இஸ்லாமியர்கள், யாதவர்கள் அதிகம் வசிக்கும் ஒரு சில இடங்கள் பாதிக்கப்படலாம். ஜாட் சமூகத்தினர் பிரச்னையை அஜித் சிங் மகனைப் பயன்படுத்தி, அதை சமநிலைப்படுத்தி விட்டார்கள். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர் போன்ற இடங்களிலும் பாஜக, காங்கிரஸ் இடையே பெரும் வேறுபாடுகள் இருக்கும். மோடி 3-வது முறையும் வெற்றி பெற்று பிரதமராவார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 330 இடங்கள் வரை நிச்சயம் கிடைக்கும். காங்கிரஸை பொறுத்தவரை உறுதியாகச் சொல்ல முடியாது. அது கூட்டணிக் கட்சிகளின் ஸ்திரத்தன்மையைப் பொறுத்தது.”

கார்கே, ராகுல் காந்தி

காங்கிரஸின் வலிமையான தேர்தல் அறிக்கைக்குப் பிறகும், மோடி பிரதமராவார் என்கிறீர்களே?

“வட இந்தியாவில் காங்கிரஸின் அறிக்கையை அவர்களின் நிர்வாகிகளே மக்களிடம் கொண்டு செல்ல மாட்டார்கள். தமிழ்நாட்டில் பேசப்பட்ட அளவுக்கு வட இந்தியாவில் காங்கிரஸ் அறிக்கை பேசுபொருளாகவில்லை. பாஜக அறிக்கையில் சாதி வாரி கணக்கெடுப்பு போன்ற சென்சிட்டிவான விஷயங்கள் இடம் பெறாமல் போகலாம் அல்லது மாநில அரசே முடிவெடுக்கலாம் என்றும் கூறலாம். அதே நேரம் பொருளாதார திட்டங்களும் இடம்பெறும் என நம்புகிறேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.