டெஸ்லா எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கின் இந்திய வருகை, ஒரு சிலரால் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. மஸ்க் இந்தியாவுக்கு வந்தால் – டாடா, மஹிந்திரா, பிஒய்டி போன்ற பல நிறுவனங்களுக்கு ரிஸ்க் இருக்கிறது. ‛அதனால், நீ அமெரிக்காவிலேயே இருந்துடு சிவாஜி’ என்று இன்னொரு பக்கம் நம் ஊர் கம்பெனிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் சில ஆட்டோமொபைல் ஆர்வலர்கள், டெஸ்லாவைத் தமிழ்நாட்டுக்கு வரவேற்பதில் அவ்வளவாக உற்சாகம் காட்டுவதில்லை. இந்த நிலையில் எலான் மஸ்க்கின் இந்திய வருகை உறுதியாகி இருக்கிறது.
தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், இந்தச் செய்தியை நேற்று முன்தினம் உறுதிப்படுத்தி இருக்கிறார் மஸ்க். “Looking forward to meeting with Prime Minister @NarendraModi in India!” என்று அவர் சொல்லியிருப்பது, பலரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

எலான் மஸ்க், பிரதமர் மோடியைச் சந்திப்பது இது இரண்டாவது முறை. ஏற்கெனவே போன ஆண்டு ஜூன் மாதம் மோடியைச் சந்தித்துவிட்டு, எலான் மஸ்க் போட்ட பதிவு பலரால் பேசுபொருளானது. “பிரதமரின் சந்திப்பு அழுத்தத்தைக் கொடுத்து விட்டது” என்று ஓப்பனாகவே ஸ்டேட்மென்ட் விட்டார் மஸ்க்.
அழுத்தமாக இருந்த மஸ்க் இப்போது ரிலீஃப் ஆகியிருக்கும் மகிழ்ச்சிக்குக் காரணம் – நம் மத்திய அரசின் புது இறக்குமதிக் கொள்கை மற்றும் வரித் தளர்ப்பு போன்ற விஷயங்கள்தான். வெளிநாட்டுக் கம்பெனிகள், நம் உள்நாட்டில் சுமார் 500 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்தால், அந்த நிறுவனங்களுக்கு 15% இறக்குமதி வரி கிடைக்கும் என்கிற திட்டத்தை அறிவித்திருந்தார்கள். 500 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது நம் ஊருக்கு சுமார் 4,150 கோடி ரூபாய் அளவில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும்.

பிரதமரை, மஸ்க் இந்தத் தேர்தல் நேரத்தில் சந்திக்க வருவது, ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் தாண்டி அரசியல் விமர்சகர்களையும் சிந்திக்க வைக்கிறது. ‛பாஜகவுக்குப் பிரசாரம் பண்ண வருகிறார் மஸ்க்’ என்கிற ரீதியில்கூட செய்திகள் பரவுகின்றன. அநேகமாக, ஏப்ரல் 22-ம் தேதிவாக்கில் தனது டெஸ்லா எக்ஸிக்யூட்டிவ் அதிகாரிகளுடன் மஸ்க், பிரதமர் மோடியைச் சந்திப்பார் என்கிறார்கள். இருந்தாலும், தேதி உறுதி செய்யப்படவில்லை. ‛எலெக்ஷன்தான் 19-ம் தேதி முடிஞ்சுடுமே’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இருந்தாலும், அதன் பிறகுதான் இந்தியாவில் மீதமுள்ள 5 கட்டத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன.
தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, தெலங்கானா, குஜராத் – இந்த 4 மாநிலங்களும்தான் டெஸ்லாவின் வருகைக்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. இதைத் தொடர்ந்து தெலங்கானா மாநில அரசு, ‛‛இந்தா பிடி’’ என்று ஏகப்பட்ட இன்சென்ட்டிவ்களை அள்ளி வீசுகிறது டெஸ்லாவுக்கு. இன்னொரு பக்கம் மஹாராஷ்ட்ரா – மஹிந்திரா, மெர்சிடீஸ், ஃபோக்ஸ்வாகன் என்று வெறித்தனமான ஆட்டோமொபைல் மாநிலமாக இருப்பதையும் யோசிக்கிறதாம் டெஸ்லா. இதைத் தாண்டி, பிரதமருக்கு எந்த மாநிலம் பிடிக்கும் என்று உலகமே அறியும். குஜராத்தில் மே 7-ம் தேதி தேர்தல். மஸ்க் வருவது ஏப்ரல் இறுதியில்.
சந்திப்பின்போது பிரதமர் என்ன சொல்வார்? ‛‛மஸ்க்கு, குஜராத்துக்கு வாங்க; பழகுங்க… பிடிச்சா இங்க ஃபேக்டரி போடுங்க; பிடிக்கலேனாலும் ஃபேக்டரி போடுங்க!’’ என்று மோடி சொல்லப்போகும் மைண்ட் வாய்ஸ் டயலாக்தான் நமக்குக் கேட்கிறதே! அநேகமாக, மில்லியன் டாலர்கள் முதலீட்டுப் பணத்தைக் கையோடும் எடுத்து வரலாம் மஸ்க்.
இன்னொரு தகவலும் பேசப்படுகிறது. அதாவது – டெஸ்லா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் பார்ட்னர்ஷிப் வைத்து மின்சார வாகனங்களுக்கான உற்பத்தியில் இறங்கப் போவதாகவும் தகவல் அடிபடுகிறது. இதன் மூலம் வாகனத் துறையிலும் ரிலையன்ஸ் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதாகவும் சொல்கிறார்கள்.
அப்புறம் என்ன, ‛குஜராத்தில் டெஸ்லா தொழிற்சாலை; பிரதமர் திறந்து வைக்கிறார்’னு ஹெட்லைன்ஸ் வந்தாலும் ஆச்சரியமில்லை!