மைக்ரோனேசியாவிலுள்ள (Micronesia) அமெரிக்க தீவு பிரதேசமான குவாமிலிருந்து (Guam) 415 மைல் தொலைவில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிகெலோட் அட்டோல் (Pikelot Atoll) தீவில் சிக்கிக்கொண்ட மூன்று பேர், பனை மர ஓலைகளால் உயிர் பிழைத்திருக்கின்றனர். மக்களே வசிக்காத, பனை மரங்களால் சூழப்பட்ட 32 ஏக்கர் பிகெலோட் தீவிலிருந்து கடந்த செவ்வாய்கிழமை, 40 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களை அமெரிக்க கடலோர காவல் படை கண்டறிந்ததாகக் கூறப்பட்டதையடுத்து இந்த சம்பவம் வெளியில் தெரியவந்திருக்கிறது.

இருப்பினும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் கண்டறியப்படவில்லை என அமெரிக்க கடலோர காவல் படை வியாழனன்று அறிக்கை மூலம் வெளிப்படுத்தியது. அந்த அறிக்கையில், `40 வயதுடைய மூன்று பேர், மார்ச் 31 அன்று மைக்ரோனேசியாவின் கூட்டாட்சி மாநிலங்களின் ஒரு பகுதியான பொலோவாட் அட்டோல் (Polowat Atoll) தீவிலிருந்து, சுமார் 115 மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள பிகெலோட் அட்டோல் தீவுக்கு, மோட்டார் பொருத்தப்பட்ட 20 அடி நீல ஸ்கிஃப் (Skiff) படகில் புறப்பட்டனர்.
ஆறு நாள்கள் ஆகியும் அவர்கள் திரும்பி வராததையடுத்து, அவர்களின் உறவினர் ஒருவர் குவாமில் உள்ள கடலோர காவல்படையின் கூட்டு மீட்பு துணை மையத்தில் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, மோசமான வானிலையில் 78,000 சதுர கடல் மைல்களுக்கு மேல் அதிகாரிகள் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படையின் P-8 Poseidon விமானத்தில் சென்ற மீட்புப் பணி அதிகாரிகள், அந்தத் தீவில் பனை ஓலைகளால் எழுதப்பட்டிருந்த `HELP’ அடையாளத்தைக் கண்டறிந்து மீட்புப் பணியைத் தொடங்கினர். பின்னர் இறுதியாக, அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர் (ஏப்ரல் 9). பனை ஓலைகளால் அவர்கள் செய்த புத்திசாலித்தனமான செயல்தான் அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்க எங்களுக்கு உதவியது’ என அமெரிக்க கடலோர காவல் தெரிவித்திருந்தது.
இவ்வாறு, அந்தத் தீவிலிருந்து மீட்கப்படுவது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று மாலுமிகள் மணலில் `SOS’ என்று எழுதிவைத்த அடையாளத்தின் மூலம் மீட்கப்பட்டனர்.