ஏப்.19-ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – புகார் அளிக்க உதவி எண்கள் வெளியீடு

சென்னை: தமிழக அரசின் தொழிலாளர் துறை ( தொழிலாளர் இணை ஆணையர்-1, சென்னை ) சார்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135 ( B )-ன் கீழ் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின் படி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களான தினக் கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு அவர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

அதேபோல், தமிழகத்தில் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி 100 சதவீதம் வாக்களிக்க ஏதுவாக, விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும். தேர்தல் நாளில் விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது குறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என தனித் தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன.

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தொழிலாளர் துணை ஆய்வாளர் ( வட சென்னை ) சி.விஜய லட்சுமி 9840829835, தொழிலாளர் துணை ஆய்வாளர் ( தென் சென்னை ) இ.ஏகாம்பரம் 9790930846, தொழிலாளர் துணை ஆய்வாளர் ( மத்திய சென்னை ) ஆர்.வேத நாயகி 9884264814 ஆகியோரை மேற்கூறிய செல்போன் எண்களிலும், 044-24330354 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.