காலை ஆறு மணிக்கு அம்மா பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு எழுவதுதான் என் வழக்கம். ஆனால், அன்று வழக்கத்திற்கு மாறாக காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வேலைகளைப் பார்க்கத் தொடங்கியிருந்தார். எப்போதும் குங்குமம் மட்டும் இருக்கும் அம்மாவின் நெற்றியில் அன்று கூடுதலாக விபூதியும் சேர்ந்து இருந்தது. அமாவாசை, பௌர்ணமி என ஏதேனும் ஒரு தினமாக இருக்கும் என கடந்து சென்றேன். அதற்கு தோதாக தாத்தாவின் படத்தின் அருகிலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வழக்கமான பதற்றங்களுடன் 9 மணிக்கெல்லாம் அம்மாவைத் தவிர எல்லோரும் வீட்டிலிருந்து வெளியேறினோம். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வரும்போது, ‘ ‘இந்த வயசுல என்ன இருக்கு, டிரெஸ் எடுத்துக் குடுத்தாங்க, கோயிலுக்குப் போயிட்டு வந்தோம்’ என நடக்காத ஒரு கதையை அம்மா, மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பிறகுதான் அன்று அம்மாவின் பிறந்தநாள் என்பது தெரிந்தது. நம் பிறந்த நாளை எதிர்பார்த்து, பிடித்தது எல்லாம் செய்யும் அம்மாவின் பிறந்தநாளைக்கூட நம்மில் பலரால் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதற்காக அவர்கள் வருந்துவதும் இல்லை. ஏனென்றால், இது வேண்டாம், இது வேண்டும், இது தான் வேண்டும் என தீர்க்கமாக கேட்கத் தெரியாமல் வாழப் பழகியவர்கள் அவர்கள். பல குடும்பத்தலைவிகள் குரல் அற்றவர்கள்தான். குற்ற உணர்வுடன் வாழ்த்துகள் சொன்னேன்.

‘பொறந்தநாளைக்கு என்னம்மா வேணும்’ என்று கேட்டதும், ‘என்ன வேண்டியிருக்கு….’ என்ற ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது…’ லீவு இருக்கு எங்கயாவது போகலாம்’ என்றேன். வற்புறுத்தலுக்குப் பிறகு ‘எங்கனாலும் ஓ.கே. உங்களுக்கு எங்க போகணும்னு தோணுதோ அந்த இடத்துக்கு டிக்கெட் புக் பண்ணுங்க போலாம்’ என்றார். அம்மா மட்டுமல்ல, மாமியார், நாத்தனார்கள்கூட இதே ரகம் தான். என்ன வேண்டும் என்பதைக் கேட்பதில், கருத்துகளைச் சொல்வதில் இந்தப் பெண் இனத்திற்கு தயக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். விருப்பு, வெறுப்புகள் நீங்கி, மழுங்கி தனி உலகத்தில் ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களின் ஏக்கக்குரல் நம் வீட்டு பாத்திரங்களுக்கும், அடுப்பிற்கும்தான் தெரியும். உயிரில்லா பொருள்களிடம் மட்டும் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்த தெரிந்த ஜீவராசியே பெண் இனம். அவைதான் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை… தன்னை அடக்குவதில்லை என்பதை மட்டும் ஆழமாக நம்புகிறார்கள்.
குடும்பத்தலைவி பெயரில் என் மாமியார் பெயர்தான் குடும்ப அட்டையில் இருக்கிறது. 60 வயதில் தோழிகளுடன் கோயிலுக்குச் செல்ல கடந்த வாரம் அத்தனை முறை அனுமதி கேட்டு மறுக்கப்பட்ட நிலையில் ஏக்கப் பெருமூச்சு விட்ட மாமியாரின் மனநிலையை எப்படி விவரிப்பது… பெற்றோர்களுக்காக, குடும்பம், குழந்தைகளுக்காக வாழப் பழகியவர்கள் கோபத்தைக்கூட இயல்பாய் வெளிப்படுத்த முடியாது. கூடவும் கூடாது… அப்படி வெளிப்படுத்தும் பெண்கள் வீட்டிற்கு அடங்காதவர்கள். திமிர் பிடித்தவர்கள் என எளிதாக முத்திரை குத்தப்படுவார்கள்.

ஓரிடத்திற்கு தோழிகளுடன் செல்ல வேண்டும் என்றாலோ, பெற்றோர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றாலோ, குடும்பத்தார் சொல்லும் வேலைகளையெல்லாம் தட்டிக் கழிக்காமல் வாரம் முழுவதும் செய்ய வேண்டும். கணவரைப் பார்க்கும்போதெல்லாம் கேட்டு, கெஞ்சிதான் தனக்கானவற்றைச் செய்துகொள்ள வேண்டும்,. கணவரோ, வீட்டில் இருப்பவர்களோ மறுப்பு தெரிவித்தால் ஆசைக்கு அங்கேயே பூட்டு போட்டுவிட வேண்டியதுதான். எல்லா இடங்களிலும் கீ கொடுத்த பொம்மைகள்போல் சுழல்வதை பெண் இனத்திற்கு சமூகம் பழக்கப்படுத்திவிட்டது. உலகத்தின் அசைவுகளுக்கெல்லாம் ஏற்ப வாழும் வலியை எந்த ஆனாலும் புரிந்துகொள்ள முடியாது.
பொதுவாக, வீட்டில் மீனாட்சி ஆட்சியா, சிதம்பரம் ஆட்சியா என்ற கேள்வியை நம்மில் பலரும் எதிர்கொண்டிருப்போம். உண்மையில், மீனாட்சியை கேட்டால்தான் தெரியும், அவள் எத்தனை இடங்களில் பொறுத்துப் போகிறாள் என்பது. எங்கள் வீட்டில் மனைவி சொல்வதுதான் இறுதி முடிவு என்று மார் தட்டுபவர்களிடம், அவளிடம் இருந்து வேறு என்ன சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டு, இந்த உரிமையைக் கொடுத்தார்கள் என்ற கேள்வியைத்தான் கேட்கத் தோன்றுகிறது. என் பக்கத்து வீட்டு அக்கா சுந்தரி, கணவரைவிட நல்ல இடத்தில், நல்ல ஊதியத்தில் வேலைபார்த்து வந்தார்.
குடும்பத்தை கவனிக்க வேண்டும், குழந்தையை கவனிக்க வேண்டும், எல்லோருக்கும் சுந்தரி அக்காவின் நேரமும், அன்பும் தேவையிருக்கிறது. என்றெல்லாம் பேசி அவரை வேலையைவிட வைத்து, வீட்டின் நிதி அதிகாரத்தை கையில் கொடுத்தார்கள். சில நாள்களில் ‘நீ வீட்ல தான இருக்க, மெதுவா சாப்பிடலாம், தூங்கலாம், போன் பண்ணா எடுக்க மாட்டியா, சின்னச்சின்ன செலவுகளுக்கு கணக்கு கேட்பது என அவளின் மொத்த உலகத்தையும் முடக்கினார்கள். வீட்டில் சுந்தரி அக்கா பேச்சை எல்லோரும் கேட்பார்கள்தான். ஆனால், அங்கு அவள் கூண்டுக்குள் மாட்டிய கிளியாக நின்று கம்பிகளிடம்தான் தன் அதிகாரத்தைக் காட்டுகிறாள் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை.

சில வாரங்களுக்கு முன் என் அலுவலகத்தோழி திவ்யாவிற்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது. சென்னை வந்து நான் ஆச்சர்யமாக வியந்து பார்த்தவள் அவள். எதையும் தனியாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவள். அலுவலகத்தில் அவளுக்கென்று ஓர் இடத்தை நிரப்பி வைத்திருந்தாள். ஆளுமையானவள். அவளை பெண் பார்க்க வருவது தெரிந்ததும் நானும் அவளுடன் சென்றிருந்தேன். மாப்பிள்ளையை நிமிர்ந்துகூட பார்க்காமல் ஓ.கே என்றாள். அலுவலகத்தில் சின்னச்சின்ன விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும் என்பதை அதிக கவனத்துடன் பார்த்துப் பார்த்துச் செய்யும் இவளா, மாப்பிள்ளையை நிமிர்ந்துகூட பார்க்காமல், ஓ.கே சொல்கிறாள் என்ற ஆச்சர்யம் என்னை ஒட்டிக்கொண்டது. வியப்பை அடக்காமல் அவளிடம் கேட்டே விட்டேன்.
‘இது எனக்கு ஏழாவது பெண் பார்க்கும் படலம். ஏற்கெனவே 32 வயசு ஆகுது. மாப்பிள்ளை கிடைக்க மாட்டேங்குதுன்னு புலம்புறாங்க. இதுல நான் என்னத்த சொல்ல…எல்லாருக்கும் ஓ.கேனா எனக்கும் ஓ.கேனு மண்டையாட்டுற உரிமை தான் இப்போ எனக்கு இருக்கு என்றாள். அந்த மாப்பிள்ளையுடன் அடுத்த சில வாரங்களில் திவ்யாவிற்கு திருமணம். திருமண தேதியையும் மாப்பிள்ளை வீட்டாரே குறித்தார்கள். இறுதியில் பீரியட்ஸ் தேதியன்று மணவறையில் அமரும் சூழலில் திவ்யா நின்றாள். இதுதான் ஒரு பெண்ணுக்கு திருமணத்தில் இருக்கும் கருத்து சுதந்திரம். ஆடை, அலங்காரம் வாங்க, மணப்பெண்ணை அழைத்துச்செல்வதையெல்லாம் கருத்து சுதந்திரம் என்று இந்த சமூகம் எண்ணிக்கொள்கிறது. ஆனால், தனக்குப் பிடித்த பையனை திருமணம் செய்து கொள்ளவும், எனக்கு இவரைப் பிடிக்கவில்லை, திருமணம் வேண்டாம் என்று மறுக்கவும் நூற்றுக்கு 30 பெண்களுக்குக்கூட வாய்ப்பு கிடைப்பதில்லை. பெண்கள் நிலைமை முன்பு மாதிரி இல்லை… எல்லா இடத்திலும் ஆதிக்கத்துடன் இருக்கிறார்கள் என்பவர்கள், நூற்றில் ஒரு பெண்ணின் வெற்றியைப் பார்க்கிறார்கள். ஆனால், 99 பெண்களின் தோல்வியையும்,அவர்களின் கண்ணீருக்கு பின்னால் இருக்கும் வலியையும் அவர்கள் உணர்வதே இல்லை.

மிகப்பெரிய அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் கருத்துகள்கூட பல இடங்களில் உதாசீனம் செய்யப்பட்டு இருக்கலாம். எங்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்து அப்பாவின் நண்பர்கள் அரசியல் பேசுவது வாடிக்கையான ஒன்று… அம்மா அதில் கருத்து சொல்ல வந்தாலோ, அல்லது வீட்டின் முக்கியமான வேறு முடிவுகள் எடுக்கும்போது கருத்து சொல்ல வந்தாலோ அதெல்லாம் சரியா வராது என்று அப்பா ஒரு வார்த்தையில் முடித்துக்கொள்வார். கருத்துகள் மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு நொந்து போனவள், இப்போதெல்லாம் ஒரு பிரச்னை எனில் அது குறித்துப் பேசுவதே இல்லை. முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போதும் அவளின் கைகள் மாவு வழித்துக்கொண்டோ, மிக்ஸி சுவிட்சை ஆன் செய்து கொண்டோ தான் இருக்கும். அம்மா பேசப்பிடிக்காமல் ஒதுங்கியிருப்பதுகூட, ‘அவளுக்கு ஒன்றும் தெரியாது’ என்ற அர்த்தமாகிவிட்டது. ஒரு பெண் அரசியல் பற்றியோ, சாதி பற்றியோ, செக்ஸ் பற்றியோ பேசும் அதிகாரம் இல்லை. குழந்தை, திருமண வயது இவற்றில் எல்லாம் மண்டை ஆட்டும் அனுமதி மட்டுமே பல பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதான் சுதந்திரம் என்று சமூகம் நினைத்துக்கொள்கிறது.
உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டது , சுதந்திரமாக இருக்கிறார்கள், ஜாலியாக இருக்கிறார்கள் என்று நீங்களே மனக்கோட்டை கட்டி வாழாதீர்கள். பாத்திரம் தேய்க்கும் கைகளுக்குள் ஆயிரம் கனவு ரேகை அழிந்துகொண்டு இருக்கலாம். வியர்க்க விறுவிறுக்க சமைக்கும் உடம்புக்குள்ளும் ஆயிரம் லட்சியங்கள் வழிந்தோடிக் கொண்டு இருக்கலாம். சுதந்திரமாக இருக்கிறாள், எல்லாம் கிடைத்துவிட்டது என்ற எண்ணமே ஒரு வகையான சிறைதான். அதையும் நாம்தான் கட்டமைத்து அவளை உள்ளே தள்ளிப் பூட்டி வைத்திருக்கிறோம். எதுவும் இங்கு கிடைக்க வேண்டாம். எனக்கானதாக இருக்க வேண்டும் என்பதே பெண்களின் மிகப்பெரிய ஆசை.

அவளின் கருத்துகளை, ஆசைகளை ஒரு முறையாவது காது கொடுத்துக் கேளுங்கள். உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் மெளனம் உடைந்து சிறகு விரிய தேவையான ஆயுதம் உங்கள் மனமாற்றம் மட்டுமே. அவளின் எண்ண வோட்டங்கள் மட்டுமல்ல, அமுங்கிக்கிடக்கும் அவளும் சிறகு விரிக்கத் தயாராக இருக்கிறாள். மாற்றத்தைத்தேட வெளிச்சமாகநில்லுங்கள் .வெளிச்சத்தில் அவளின் சிறகு மின்னலாக மாறும்…