ஆந்திரா மாநிலத்தில் வரும் மே மாதம் 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தேர்தலுக்கு ‘மேமந்த சித்தம்’ (நாங்களும் தயார்) என்ற பிரசாரத்தை முன்வைத்துக் கடந்த 11 நாள்களாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு விஜயவாடா மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அவர் பேருந்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது, சிங்நகர் தாபா அருகே கோட்ல செண்டர் எனும் இடத்தில் கூட்டத்திலிருந்து மலர்களுடன் கற்களும் வீசப்பட்டன. இதில் ஒரு கல் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது கண்ணுக்கு மேல் உள்ள நெற்றிப் பகுதியில் பட்டது. ஜெகன்மோகன் ரெட்டியுடன் நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எல்லம்பல்லி ஸ்ரீநிவாஸ்க்கும் கல்லடி காயம்பட்டது. உடனே ஜெகன்மோகன் ரெட்டிக்கு, பேருந்திலிருந்த மருத்துவர் மூலம் முதலுதவி செய்யப்பட்டது.
முதல்வர்மீது கல்லெறிந்த விவகாரம் ஆந்திரா முழுவதும் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ஆந்திர அமைச்சர் அம்பதி ராம்பாபு, “ `மேமந்த சித்தம்’ பிரசாரத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை ஜீரணிக்க முடியாத என்.டி.ஏ கூட்டணியின் தலைவர்கள், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்குக் காயம் ஏற்படுத்தியிருக்கின்றனர்.

முதல்வர்மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் எதிர்க்கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடுதான். இந்தச் சம்பவம் மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி வன்முறையைத் தூண்டுகிறது என்பதைத் தெளிவாக நிரூபித்துள்ளது.” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜெகன் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.