சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டிக்கு முந்தைய நாளான நேற்று இரு அணிகளின் சார்பிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தது.
சென்னை அணியின் சார்பில் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் கூறியிருந்தார். அப்போது, தோனி குறித்தும் ருத்துராஜ் குறித்தும் நெகிழ்ச்சியாக சில விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, “ரசிகர்கள் தோனி மீது வைத்திருக்கும் அன்பு அலாதியாக இருக்கிறது. இந்திய மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பினால் சென்னை அணிதான் அதிக பலனை பெறுகிறது. வெளியூர் மைதானங்களிலும் அதிகப்படியான மஞ்சள் ஜெர்சிக்களை பார்க்கையில் எங்களுக்கு ஒரு அணியாக பெருமையாக இருக்கிறது.

இப்பேற்பட்ட ஆதரவும் ஆர்ப்பரிப்பும் எதற்காக யார் மூலம் எங்களுக்குக் கிடைக்கிறது என்பதில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் தோனியை நினைத்தும் அணிக்கான அவரின் பங்களிப்பை நினைத்தும் பெருமிதம் கொள்கிறோம்.
தோனிக்கும் ருத்துராஜூக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தோனி ரொம்பவே கூலான கேப்டன். ருத்துராஜூம் அப்படியே இருக்கிறார்.
நீங்கள் ருத்துராஜின் கேப்டன்சியை வெற்றி தோல்விகளின் வழி அளவிடுவீர்கள். ஆனால், நாங்கள் அப்படி அளவிடுவதில்லை. அணிக்குள் அவரின் ஆளுமைத்திறன் உயர்தரத்தில் இருக்கிறது.

தோனியைப் போன்ற நீண்ட நாட்களுக்கான கேப்டனாக ருத்துராஜ் இருப்பார் என நம்புகிறோம். ருத்துராஜ் ஒரு அற்புதமான பேட்டர். தான் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் ரொம்பவே மெதுவாக ஆடுகிறார் என சொல்வது அநியாயம். அவர் ஆடும் சூழலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கொல்கத்தாவுக்கு எதிராக ஒரு கேப்டன் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடியிருந்தார். அவரின் ஃபார்ம் குறித்து எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.’ என்றார்.
சென்னை Vs மும்பை போட்டியில் யார் வெல்லப்போகிறார் என்கிற உங்களின் கணிப்பை கமென்ட்டில் தெரியப்படுத்துங்கள்!