புதுடெல்லி: ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 17 இந்தியர்களை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்திருந்த சூழலில், இஸ்ரேலில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை கடந்த 13-ம் தேதி சிறைபிடித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு அக்கப்பல் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர் அந்த கப்பலை சிறைபிடித்து தனது கடல் எல்லைக்குள் கொண்டு சென்றனர். அந்த கப்பலில் 25 மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்றும் பின்னர் தகவல் வெளியானது.
இதையடுத்து, இந்தியர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 14-ம் தேதி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது ஜெய்சங்கர், “இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பல் ஈரான் காவலர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இருந்த 17 இந்தியப் பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் நேற்று ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அவர் கூறும்போது, ‘‘ஈரான் எல்லையில் சிறைபிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ்கப்பலின் விவரங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். இந்திய அரசின் பிரதிநிதிகள் கப்பலின் பணியாளர்களை சந்திக்க விரைவில் அனுமதி வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
கப்பலில் பல்வேறு நாட்டினர்: ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில், இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் எஸ்டோனியா நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இயல்பு நிலை: ஏப்ரல் 1-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவ அதிகாரி உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் சுமார் 5 மணி நேரம் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால், இதில் 99 சதவீத ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவை அமெரிக்கா, ஜோர்டான், பிரான்ஸ், இங்கிலாந்து படையினரின் உதவியுடன் நடுவானிலேயே வழிமறித்து அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதல் 3-ம் உலகப் போருக்கு வித்திடுமோ என்று இணையவாசிகளில் பலர் அச்சம் தெரிவித்த சூழலில் இஸ்ரேல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வழக்கம்போல மக்கள் கடற்கரைகளில் ஓய்வெடுத்தும், உணவகங்களில் கூடிப்பேசியும் உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
இதுகுறித்து இஸ்ரேலின் ஹெர்ஸ்லியா நகரத்தை சேர்ந்த டெபி ஃபென்டன் கூறும்போது, “என் கணவர் எப்போதும்போல காலை 8.30 மணிக்கு நடைபயிற்சிக்கு சென்றார். உணவகங்கள், கடைகள் திறந்திருந்தன. கடற்கரையில் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற நிலைமைகள் காணப்பட்ட போதிலும் உள்ளூர்வாசிகள் இதுபோன்ற விஷயங்களுக்கு பழகிவிட்டனர்’’ என்று தெரிவித்தார்.
பள்ளிகள் மூடல்: இஸ்ரேலில் இயல்புநிலை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட்டபோதிலும், திங்கள்கிழமை பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருந்ததாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல்ஏற்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது வழித்தடத்தை மாற்றியுள்ளன. மேலும், சிலநிறுவனங்கள் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு தங்களது விமான சேவையை ரத்து செய்துள்ளன.
குறிப்பாக, லண்டன் அல்லது பாரிஸ் போன்ற நகரங்களில் இருந்துபாரசீக வளைகுடா அல்லது இந்தியாவில் உள்ள இடங்களுக்கு பயணிக்க மாற்றுப் பாதைகளை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு விமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால், எரிபொருள் செலவினம் அதிகரிப்பதுடன், பயண நேரமும் அதிகமாகிறது. இதனால், விமான நிறுவனங்களுக்கு கடும்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.