‘புஷ்பா’வின் அதிரடி ஹிட்டிற்கு பிறகு பான் இண்டியா இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத்.
சூர்யாவின் ‘கங்குவா’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, தனுஷின் ‘குபேரா’, தெலுங்கில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’, பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத்சிங்’, என அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார்.

அல்லு அர்ஜூன், சுகுமார் கூட்டணியின் ‘புஷ்பா’வின் பாடல்கள் உலக அளவில் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து இப்போது ‘புஷ்பா 2’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து பாடலின் லிரிக் வீடியோவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 15 என அறிவிக்கப்பட்டிருப்பதால், பின்னணி இசை வேலையையும் ஆரம்பித்துவிட்டார்.
சூர்யாவின் ‘கங்குவா, க்ளிம்ஸ், போஸ்டர்கள் என கவனம் பெற்று வருகிறது. ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார். உலகெங்கும் பல மொழிகளில் வெளியாகவிருப்பதால், தனிக் கவனம் எடுத்து பாடல்கள் கொடுத்துள்ளார். மிக விரைவில் படத்தின் சிங்கிள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னணி இசை, இன்னமும் தொடங்கப்படவில்லை. கிராபிக்ஸ் வேலைகளுக்கு பின்னரே, பின்னணி இசை வேலைகள் தொடங்கும் என்கிறார்கள். விஷாலின் ‘ரத்னம்’ படத்திற்கு பின், டிஎஸ்பி இசையில் அடுத்த ரிலீஸ் இதுதான் என்ற பேச்சு இருக்கிறது.

அடுத்ததாக அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடல்கள் கொடுக்கும் வேலைகளையும் தொடங்கிவிட்டார் டிஎஸ்பி. ‘வீரம்’ படத்திற்குப் பிறகு அஜித்துடன் டிஎஸ்பி இணைந்திருப்பதால் புதுவிதமான இசையை எதிர்பார்க்கலாம் என்கிறது அவரது வட்டாரம்.
இதனை அடுத்து சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதுவும் ஐந்து மொழிகளில் வெளிவருகிறது என்பதால், பான் இண்டியா ஸ்டைலில் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் நாகார்ஜுனாவின் இன்ட்ரோ மியூசிக்கும் வெளியாகியுள்ளது.

இது தவிர பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் வேலைகளும் நடந்து வருகின்றன. இதற்கென மூன்று பாடல்கள் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. இன்னொரு ஸ்பெஷல், அல்லு அர்ஜூன், பவன் கல்யாண், அஜித் ஆகியோரின் படங்களைத் தயாரிப்பது மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்த நிறுவனத்தில் டி.எஸ்.பி.க்கு ஸ்பெஷான இடமுண்டு. அவர்களின் பெரும்பாலான படங்களில் அவர் தான் இசையமைப்பாளர்.

நாக சைதன்யா, சாய்பல்லவி நடிக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். தவிர ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கும், கன்னடத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ‘ஜூனியர்’ என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் டி.எஸ்.பி.
டி.எஸ்.பி.க்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளும் எழுதவும், படிக்கவும் தெரியும் என்பதால், ‘புஷ்பா’ பாடல்களில் ஒவ்வொரு மொழிக்குமே பாடல் வரிகளில் தனி கவனம் எடுக்கிறார். இப்போது ‘புஷ்பா 2’, ‘குபேரா’, ‘கங்குவா’விற்கும் அதே மெனக்கெடலுடன் உழைத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.