Raebareli: முதல் பெண் பிரதமரை அளித்த ரேபரேலியில் `ராகுல் காந்தி'… வரலாறும், கள நிலவரமும்!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான ஸ்டார் தொகுதிகள் பட்டியலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளும் பேசப்படுகின்றன. காரணம் ரேபரேலி மக்களவைத் தொகுதிதான் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது. அதேபோல், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரின் மகன் ராஜீவ் காந்தியை பிரதமராக்கியது அமேதி தொகுதி. இந்த இரண்டு தொகுதிகளும், இந்திரா காந்தி, அவரின் கணவர் ஃபெரோஸ் காந்தி, அவரின் இரு மகன்கள் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற வைத்திருக்கிறது.

இந்திரா காந்தி – காங்கிரஸ்

இதில், தற்போது வரை அத்தி பூத்தாற்போல ஒன்றிரண்டு முறை மட்டுமே ஜனதா கட்சியும், பா.ஜ.க-வும் வெற்றி பெற்றிருந்தது. மற்றபடி நேரு குடும்பத்தின் கோட்டையாகவே இந்த இரு தொகுதிகளும் விளங்கின. ஆனால், 2019 தேர்தலில் அமேதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸின் கோட்டையில் பெரும் விரிசல் விழுந்தது. 2019-ல் அமேதியில் நான்காவது முறையாகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முதல்முறையாகவும் களமிறங்கிய ராகுல் காந்தியை, பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானி 2014 லோக் சபா தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் ஒன்றரை லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்று ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்முறையாக வீழ்த்தினார்.

இருப்பினும், ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு ஏழு லட்சம் வாக்குகள் பெற்று நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். இப்படியிருக்க, கடந்த 20 ஆண்டுகளாக ரேபரேலி மக்களவைத் தொகுதி எம்.பி-யாக இருக்கும் சோனியா காந்தி சமீபத்தில் ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. அதோடு, ரேபரேலி தொகுதியில் அவரின் மகள் பிரியங்கா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் களமிறக்கப்படுவாரா என்றெல்லாம் பேசப்பட்டது.

ராகுல் காந்தி

இன்னொருபக்கம், அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவாரா, இல்லை நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் களமிறக்கப்படுவாரா என்று கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், ரேபரேலி தொகுதியின் வேட்பாளராக ராகுல் காந்தியைக் காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. அதோடு, அமேதி தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத வேட்பாளராக கிஷோரி லால் சர்மா என்பவரைக் காங்கிரஸ் களமிறக்கியிருக்கிறது.

முதல் நாடாளுமன்றத் தேர்தல் – நேரு குடும்பம் – ரேபரேலி!

டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழுவால், இந்தியாவுக்கென்று உருவாக்கப்பட்ட தனி அரசியல் சாசனம் 1950, ஜனவரி 26-ல் நடைமுறைக்கு வந்த பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் 1951 அக்டோபர் முதல் 1952 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நடத்திமுடிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கு முன்பு வரை மாகாண எம்.பி-யாக இருந்த நேருவின் மருமகனும், இந்திரா காந்தியின் கணவருமான ஃபெரோஸ் காந்தி, 1952-ல் முதல்முறையாக ரேபரேலி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக எம்.பி பதவிக்கு போட்டியிட்டார்.

ஃபெரோஸ் காந்தி, இந்திரா காந்தி, நேரு

அதில் வெற்றிபெற்று ரேபரேலி தொகுதியின் முதல் எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ஃபெரோஸ் காந்தி, 1957-ல் நடந்த அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், 1960-ல் இவர் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட ஆர்.பி.சிங் வெற்றிபெற்றார். அதையடுத்து 1962-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பைஜ்நாத் குரீல் வெற்றிபெற்றார்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரை அளித்த ரேபரேலி!

1964-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மரணம், அவரின் மகள் இந்திரா காந்தி அரசியலில் நுழைவதற்கான சூழலை உருவாக்கியது. அதன்படி, 1967-ல் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தன்னுடைய கணவர் முதல்முறையாகப் போட்டியிட்டு வென்ற ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். ரேபரேலி மக்களும் இந்திரா காந்திக்கு வெற்றித் திலகமிட்டு, நாட்டுக்கு முதல் பெண் பிரதமரை அளிக்கும் வாய்ப்பை உருவாக்கினர். அதற்கடுத்து 1971-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்திரா காந்தி இதே தொகுதியில் போட்டியிட்டு சுமார் 1.80 லட்சம் வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றிபெற்றார்.

இந்திரா காந்தி

எமெர்ஜென்ஸியால் வந்த வினை… பாடம் கற்பித்த ரேபரேலி… மீண்டுவந்த இந்திரா!

1951-52 முதல் 1971 நடைபெற்ற ஐந்து நாடாளுமன்றத் தேர்தல்களில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸை வெற்றிபெற வைத்து, நேரு குடும்பத்தினரை நாடாளுமன்றத்துக்குள் அனுப்பிய அந்தத் தொகுதி மக்கள், 1977-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சியை வெற்றிபெறவைத்து இந்திரா காந்திக்கு தோல்வியைப் பரிசளித்தனர். இந்தத் தேர்தலில் ரேபரேலி மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே காங்கிரஸுக்கு முதல்முறையாகத் தோல்வியை அறிமுகப்படுத்தியது. இதற்கான முழுமுதற் காரணம் 1975-ல் இந்திரா காந்தி கொண்டுவந்த எமெர்ஜென்சிதான் என்றால் அது மிகையாகாது. எமெர்ஜென்சியல் காங்கிரஸுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் உருவான ஜனதா கட்சி, 1977 தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்திரா காந்தி – மொரார்ஜி தேசாய்

ஆனால், ஜனதா கட்சியின் ஆட்சி மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதன்பின்னர், 1980-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியின் பகிரங்க மன்னிப்பின் பலனாக ரேபரேலி மக்கள் அவரை வெற்றிபெற வைக்க, மத்தியிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், இந்தத் தேர்தல்தான் ரேபரேலி மக்கள் இந்திரா காந்தியைக் கடைசியாகக் கண்டதுமாக அமைந்துவிட்டது. 1984-ல் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு முன்பாக, இவரின் இரண்டாவது மகனும் அமேதி எம்.பி-யுமான சஞ்சய் காந்தி 1980-ல் உயிரிழந்ததால், ராஜீவ் காந்தி அமேதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனால், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் வரை நேரு குடும்பத்தைச் சேர்ந்த எவரும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லை. இதில், 1996 மற்றும் 1998-ல் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அசோக் சிங் வெற்றிபெற்றார்.

சோனியாவை `கை’ தூக்கிவிட்ட ரேபரேலி!

1991-ல் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு நேரு குடும்பத்திலிருந்து யாரும் மக்களவைக்கு செல்லாமலிருந்த நிலையில்,1999-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக மக்களவைக்குள் நுழைந்தார் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி. அதற்கடுத்து 2004-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு நேரு குடும்பத்திலிருந்து சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

சோனியா காந்தி

அன்று முதல் இன்று வரை சோனியா காந்தியே ரேபரேலி தொகுதி எம்.பி-யாகத் தொடர்கிறார். ஆனால், பா.ஜ.க-வின் வாக்கு வாங்கி ரேபரேலியில் கணிசமாக உயர்ந்துகொண்டே வந்திருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. 2004-ல் 4 சதவிகிதம், 2009-ல் 3 சதவிகிதம், 2014-ல் 21 சதவிகிதம் வாக்குகள் பெற்ற பா.ஜ.க 2019-ல் 38 சதவிகித வாக்குகள் பெற்று நிற்கிறது. இப்படியான சூழலில்தான் சோனியா காந்தி இந்தத் தேர்தலிலிருந்து விலகி மாநிலங்களவை எம்.பி-யாக நாடாளுமன்றத்துத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்திரா, சோனியா வரிசையில் ராகுலையும் வெற்றிபெறவைக்குமா ரேபரேலி!

சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான இன்று (மே 3) ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை இங்கு ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், நான்கு சட்டமன்றத் தொகுதிகளில், இந்தியா கூட்டணியில் காங்கிரஸுடன் கைகோர்த்திருக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சினர் எம்.எல்.ஏ-க்களாக இருக்கின்றனர்.

ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி

இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸும், சமாஜ்வாதியும் சீட் பகிர்வு செய்துகொண்டு போட்டியிடுவதால், கணிசமான இடங்களை இந்தக் கூட்டணி பெரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் பாரம்பர்யம் மற்றும் சமாஜ்வாதியின் வாக்குகள் ராகுலுக்கு `கை’ கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ரேபரேலியில் கடந்த முறை பா.ஜ.க சார்பில் சோனியா காந்திக்கு எதிராகப் போட்டியிட்டு 38 சதவிகித வாக்குகள் பெற்ற முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி தினேஷ் பிரதாப் சிங் தற்போது ராகுல் காந்திக்கு எதிராக இங்கு களமிறங்கியிருக்கிறார். எனவே, காங்கிரஸ் பாரம்பர்யம் ரேபரேலியில் தொடருமா, இல்லை மீண்டும் ஒரு சரிவு ஏற்படுமா என்பதை ஜூன் 4-ல் காணலாம்.

இதுவரையில் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற மொத்த தேர்தல்களில் காங்கிரஸ் 17 முறையும், பாஜக இரண்டு முறையும், ஜனதா கட்சி ஒருமுறையும் வெற்றிபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.