இவிஎம் குறித்த எலான் மஸ்க் கருத்து | ஆதரிக்கும் இண்டியா கூட்டணி – எதிர்க்கும் பாஜக

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எனப்படும் இவிஎம் இயந்திரங்கள் குறித்து டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே இவிஎம் இயந்திரங்கள் குறித்து இண்டியா கூட்டணி தலைவர்கள் சந்தேகங்களை வெளிப்படுத்திய நிலையில் தற்போது எலான் மஸ்க் பதிவுக்கு பின் இவ்விவகாரம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

எலான் மஸ்க் தனது பதிவில், “மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்தப் பதிவுக்கு முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை” என பதிலளித்தார்.

பதிலுக்கு, எலான் மஸ்க்கோ, “எதையும் ஹேக் செய்யலாம்” என ராஜீவ் சந்திரசேகருக்கு பதில் கொடுத்தார்.

இருவரின் விவாதத்துக்கு மத்தியில் இண்டியா கூட்டணி தலைவர்களும் இவிஎம் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என குரல் கொடுத்தனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் முறையாக செயல்படாததால் நமது ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. தேர்தல் நடைமுறையில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காததால் மோசடி மூலம் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டப்படும் ஆபத்து உள்ளது.” என அச்சம் தெரிவித்தார்.

தொடர்ந்து எலான் மஸ்க் பதிவை மேற்கோள்கட்டி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “தொழில்நுட்பம் என்பது சிக்கல்களை நீக்குவது. அவை பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தால், அவற்றின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும். உலகம் முழுவதும் பல தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடையும் அபாயங்கள் கொடிகட்டிப் பறக்கும்போதும், நன்கு அறியப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த ஆபத்துக்களை மேற்கோள்கட்டும்போது ஏன் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதில் குறியாக இருக்கிறீர்கள் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.

ராஜ்யசபா எம்.பி.யும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவருமான பிரியங்கா சதுர்வேதி, “இது மிக உயர்ந்த மட்டத்தில் நடக்கும் ஒரு மோசடி. இன்னும் தேர்தல் ஆணையம் தூங்குகிறது” என்று விமர்சித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.