பாகிஸ்தானில் அவலம்; பணத்திற்காக 72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை

கைபர் பக்துன்குவா,

பாகிஸ்தான் நாட்டில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. எனினும், முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. 12 வயது சிறுமியின் தந்தை ஆலம் சையது என்பவர், 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவரிடம் அந்நாட்டு மதிப்பின்படி, ரூ.5 லட்சம் பணம் பெற்று கொண்டு மகளை விற்றுள்ளார்.

அந்த முதியவர், சிறுமியை திருமணம் செய்ய முயன்றபோது, தகவலறிந்து வந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். முதியவரையும் கைது செய்தனர். எனினும், சிறுமியின் தந்தை சம்பவ பகுதியில் இருந்து தப்பியோடி விட்டார்.

இந்த விவகாரத்தில், 72 வயது முதியவர் மற்றும் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைக்க முயன்ற நபர் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சமீபத்தில் ராஜன்பூர் மற்றும் தட்டா பகுதியில் இதுபோன்று நடைபெற இருந்த திருமண நிகழ்வை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பஞ்சாபின் ராஜன்பூர் பகுதியில் 11 வயது சிறுமியை 40 வயது முதியவர் திருமணம் செய்ய முயன்றார். இதேபோன்று தட்டா பகுதியில், 50 வயது பணக்காரர் ஒருவருக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற இருந்தது தடுத்து நிறுத்தப்பட்டது.

கடந்த 6-ந்தேதி, ஸ்வாட் பகுதியில் 13 வயது சிறுமியை திருமணம் செய்ய இருந்த 70 வயது முதியவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறுமியின் தந்தையும் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த சிறுமி பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.