உதகை: உதகையில் இன்று (ஜூன் 17) ஒரு மணி நேரம் கன மழை கொட்டியதால் மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்தவாறு சென்றன.
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் நீலகிரி உட்பட பல இடங்களில் தீவிரமானது. நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக மழை பாதிப்பு குறைந்து காணப்பட்டது. இந்தநிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 21-ம் தேதி வரை தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இயல்பை விட ஒரு சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்றும், இன்றும் கனமழை பெய்தது. உதகையில் திங்கள்கிழமை மதியம் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் உதகை ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் தேங்கி நின்ற தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்தவாறு சென்றன. ரயில்வே காவல் நிலையத்தை மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. அருகில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையிலும் தண்ணீர் புகுந்தது.
மழையால், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் உதகை ரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகள் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. இதேபோல் கனமழை காரணமாக, உதகை மார்க்கெட்டுக்குள் வெள்ளம் ஆறாக ஓடியது. இதனால் அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.உலகை அப்பர் பஜாரில் உள்ள நடைபாதையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மழை காரணமாக, படகு இல்லத்தில் ஒரு மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. தாவரவியல் பூங்காவில் குடைகளை பிடித்தபடி சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி வந்தனர்.
உதகையின் சுற்றுவட்டார பகுதிகளான குன்னூர், கேத்தி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசாக மழை பெய்தது. இன்று உதகையில் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 74 சதவீதமாகவும் காற்றின் வேகம் மணிக்கு 6 கிலோ மீட்டர் என்று அளவிலும் இருந்தது. இதேபோல் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.