புதுடெல்லி: ராகுல் காந்தி தனது 54-வது பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர்களுடன் கொண்டாடினார்.
ராகுல் காந்தியின் 54-வது பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று கொண்டாடினர்.இதனிடையே டெல்லியில்உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், கவுரவ் கோகோய், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோருடன் நேற்று தனது பிறந்தநாளை ராகுல் காந்தி கொண்டாடினார்.
அப்போது அங்கு கேக் வெட்டிய ராகுல் கட்சியின் மூத்ததலைவர்களுக்கும், தங்கை பிரியங்காவுக்கும் ஊட்டி மகிழ்ந்தார்.
பிறந்தநாளையொட்டி ராகுல் காந்திக்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரியங்கா காந்தி தனது எக்ஸ்பக்கத்தில் கூறும்போது, “என்னுடன் நீண்ட நாட்களாக பயணிக்கும் பயணி, விவாதத்துடன் கூடிய வழிகாட்டி, தத்துவவாதி மற்றும் தலைவராக ராகுல் உள்ளார். எனது இனிய, அன்பான சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்றார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே கூறும்போது, “வேற்றுமை, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தில் ஒற்றுமை என்ற காங்கிரஸ் கட்சியின் நெறிமுறைகள் அனைத்தும்உங்களது அனைத்து செயல்களிலும் தெரியும், உண்மையின் முகத்தை அதிகாரத்துக்குக் காட்டிநாட்டில் உள்ள கடைசி ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் உங்களதுபணியைத் தொடர்ந்திட வேண்டும். மேலும், நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைவாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இல்லம், கட்சித் தலைமையகத்தைச் சுற்றிலும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. அலுவலகத்துக்கு வந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.