கடந்த வருடங்களில்; முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கப்பட்ட போது எதிர்கொண்ட சிரமங்கள் மற்றும் பெற்றோரின் மனக்குறைகள் குறித்து முழு கவனம் செலுத்தி 2025ஆம் அண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கைக்கு தேவையான திருத்தங்களை முன்வைத்து நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
இலங்கையில் வருடாந்தம் 250,000 – 300,000 வரையான மாணவர்கள்; முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்படுகின்றனர். இதற்காக பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களை சேர்க்கும் போது பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற காரணங்களால் பிறப்புச் சான்றிதழ்கள் காணாமற்போய் அவற்றை முன்வைக்க முடியாத சந்தர்ப்பங்களில், அவற்றை பொருட்படுத்தாது மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான வேறு நடைமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 2025 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் பத்திரிகைகளில் விரிவாக பிரசுரிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.