பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சார்ஜாபூரை சேர்ந்தவர் ரம்யா (பெயர்மாற்றப்பட்டுள்ளது). பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இவர், கடந்த 16-ம் தேதி அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் எக்ஸ் பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தார். இதற்கான பார்சல் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு வந்தது.
அந்த பார்சலை திறந்ததும் அதிலிருந்து நல்ல பாம்பு வெளியே வருவதை கண்டு ரம்யா திடுக்கிட்டார். மேலும் இதனால் அதிர்ச்சிஅடைந்த அவர், உடனடியாக அதனை வீடியோ எடுத்து ‘எக்ஸ்’சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.
மேலும் அவர், ‘அமேசான் நிறுவனத்தின் அலட்சியம் காரணமாகவே எனக்கு இந்த மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு?” எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த வாடிக்கையாளர்கள் அமேசான் நிறுவனத்தையும் அதன் டெலிவரி பார்ட்னரையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதற்கு அமேசான் செய்தி தொடர்பாளர், “எங்களது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் டெலிவரி பார்ட்னர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் புகாரை தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே அமேசான் நிறுவனம் வாடிக்கையாளரிடம் இருந்து பார்சலை திரும்ப பெற்றதுடன், அவரிடம் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் செலுத்திய முழுதொகையையும் திரும்ப அளித்துள்ளது.
உயிரை காப்பாற்றிய டேப்: அமேசான் பார்சலை ரம்யா லேசாக திறந்ததும் உள்ளே பாம்பு இருப்பதை கண்டார். உடனடியாக அந்த பார்சலை ஒரு பக்கெட்டில் போட்டு, அதனை வீடியோ எடுத்தார். நல்ல வேளையாக அந்த பாம்பு பார்சலை ஒட்டியிருந்த டேப்பில் ஒட்டிக்கொண்டதால் அதனால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் மூலம் அந்த பார்சலை வெளியே கொண்டு சென்றார். பின்னர் அமேசான் வாடிக்கையாளர் மையத்தில் புகார் அளித்தார். குடியிருப்பின் காவலர் பார்சலை சாலைக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு கொண்டுசென்று பாம்பை திறந்துவிட்டுள்ளார். இதுகுறித்து ரம்யா கூறுகையில், “எங்களுடைய நல்ல நேரம், பாம்பு டேப்பில் மாட்டிக்கொண்டது. அதனால் எங்களுக்கும் அடுக்குமாடி குடிருப்பில் உள்ளவர்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அமேசான் நிறுவனத்தின் அலட்சியமான போக்கினால் எங்களுக்கு ஏற்பட்ட அச்ச உணர்வில் இருந்து இன்னும் நாங்கள் வெளியே வரவில்லை” என்றார்.