“கடந்த ஆண்டு யோகா தினத்தில் 24 கோடி பேர் யோகா செய்தனர்” – ஆளுநர் ஆர்‌.என்.ரவி

கோவை: “ஒவ்வோர் ஆண்டும் யோகா செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 24 கோடி பேர் யோகா செய்தனர்” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் யோகா நிகழ்ச்சி இன்று (வெள்ளி கிழமை) நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகப் பயிற்சி செய்தனர்‌. இதில் தமிழ்நாடு ஆளுநரும் வேளாண்மை பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகப் பயிற்சி மேற்கொண்டார்.

நிகழ்வில் ஈஷா யோகா மையம் உட்பட பல்வேறு யோகா பயிற்சி பள்ளியினரின் யோகாசன நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன. மேலும், யோகாசனத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, “யோகாசனம் உடலுக்கும் மனதிற்கும் நன்மை தரும். திருமூலர், பதஞ்சலி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள். யோகாவின் நன்மைகளை மனித சமூகம் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு 24 கோடி மக்கள் யோகா செய்தனர். யோகா எளிய ஆசனங்கள் மூலம் உடல் நலத்துக்கு புத்துணர்ச்சியை தருகிறது. நல்ல அறிவாற்றலையும் அது தருகிறது. யோகா சார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களின் மூலம் இளைஞர்கள் தொழில்முனைவோர் ஆகலாம். அதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் பல்கலைக்கழக வளாகத்துக்குள், மரக்கன்று ஒன்றை ஆளுநர் நட்டு வைத்தார். நிகழ்வில் துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ் வேந்தன், டீன்கள் வெங்கடேஷ் பழனிச்சாமி, மரகதம் மற்றும் மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.