மங்கஃப்: குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள 6 மாடி கொண்ட குடியிருப்பில் 200 பேர் தங்கி இருந்தனர். இதில் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கி இருந்தனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 12-ம்தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேர் தமிழ்நாட்டையும் 23 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த காவலர் அறையில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக குவைத் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 3 இந்தியர்கள், 4 எகிப்தியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு குவைத் அரசு 15 ஆயிரம் டாலர் (ரூ.12.50 லட்சம்) இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.