Doctor Vikatan: என்னுடைய தோழிக்கு திருமணநாளன்று காலையில் பீரியட்ஸ் வந்துவிட்டது. பீரியட்ஸ் வரும் தேதியை கணித்துதான் திருமண நாள் குறித்தார்கள். ஆனாலும், வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாகவே அவளுக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது. இப்படி நிகழ்வது ஏன்…? இது போன்ற முக்கிய நாள்களில் பீரியட்ஸ் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

அனேகமாக எல்லாப் பெண்களுக்குமே அவர்களது பீரியட்ஸ் சுழற்சி குறித்து தெரிந்திருக்கும். பீரியட்ஸ் சுழற்சி சரியாக வருகிறபட்சத்தில் அதற்கேற்பதான் பெரும்பாலும் திருமண தேதியும் குறிக்கப்படும். திருமண நாளன்று பீரியட்ஸ் வரும் என எதிர்பார்த்தால், அதை முன்கூட்டியே வரவழைக்கவோ, தள்ளிப்போடவோ மருத்துவ ஆலோசனை பெறலாம். ஆனால், இதை அடிக்கடி செய்வது சரியானதல்ல. திருமணம் போன்ற மிக முக்கியமான தருணங்களில் ஒன்றிரண்டு முறை செய்யலாம்.
வழக்கமாக வரும் நாள்களில் வராமல், முன்னதாகவோ, தள்ளியோ, திருமண நாளன்று பீரியட்ஸ் வருவது என்பது எதிர்பாராத நிகழ்வுதான்… சம்பந்தப்பட்ட பெண்ணையும் அவரின் குடும்பத்தாரையும் தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் விஷயம்தான். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகினால், ப்ளீடிங்கை உடனடியாக நிறுத்த புரொஜெஸ்ட்ரான் மாத்திரைகள் பரிந்துரைப்பார். ஆனால், அதுவும் மிக மிக அவசியம் என்ற நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆரோக்கியம் பரிசீலிக்கப்பட்டு, அவருக்குப் பாதுகாப்பானது என்று தெரிந்தால் மட்டுமே பரிந்துரைக்கப்படும். மற்றபடி, இப்போது பீரியட் டிராக்கர் ஆப் வசதியெல்லாம் வந்துவிட்ட நிலையில், பீரியட்ஸ் வரலாம் என எதிர்பார்க்கிற தேதியை கணக்கிட்டுத் தெரிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப திருமணத்தைத் திட்டமிடலாம்.

இந்த விஷயத்தில் மருத்துவராலும் இன்ஸ்டன்ட் தீர்வு தர முடியாது. என்னதான் மருந்து, மாத்திரைகள் கொடுத்தாலும், அந்த மருந்துகள் வேலைசெய்து, பீரியட்ஸ் வர மூன்று- நான்கு நாள்கள் ஆகலாம். மருத்துவருக்குப் போதுமான நேரம் இருந்தால், அதற்கேற்ப இந்த விஷயத்தில் அறிவுரை வழங்குவார். பொதுவாகவே, பீரியட்ஸை தள்ளிப்போடுவது சுலபம். முன்கூட்டியே வரவழைப்பதுதான் சற்று சிக்கலானது. 28 நாள்களில் வரும் பீரியட்ஸை 20 நாள்களிலேயே வரவழைக்க முயலும்போது உடல் குழப்பத்துக்கு உள்ளாகும். மூளையிலிருந்து அனுப்பப்படும் சிக்னலானது, கர்ப்பப்பையை அடைந்து, அதன் பிறகுதான் பீரியட்ஸ் வருகிறது. முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றி வரவழைக்கிற செயல்கள் எல்லாம் மூளையைக் குழப்பி, அதைச் சரியாக வேலை செய்ய விடாமல் செய்துவிடும்.
எப்போதும் சரியாக வருகிற பீரியட்ஸ், இப்படி திடீரென முன்கூட்டியே வரவோ, தள்ளிப்போகவோ ஸ்ட்ரெஸ்ஸும் ஒரு காரணமாக இருக்கலாம். திருமணம் என்பது பயமும் பதற்றமும் ஸ்ட்ரெஸ்ஸும் நிறைந்த அனுபவமாக இருப்பதுதான் காரணம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்கெனவே பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கலாம். அதன் காரணமாகவும் இப்படி எதிர்பாராத நேரத்தில் பீரியட்ஸ் வருவது நிகழலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.