இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வாழ்க்கைப் பயணத்தை `I Have the Streets – A Kutti Cricket Story!’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் நடந்திருந்தது. இந்த நிகழ்வில் அஸ்வின் அந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசியவை இங்கே…

அஸ்வின் பேசியதாவது, “அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் சிறிய சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தி கொண்டாட மறந்துவிடுகிறோம். செயிண்ட் பீட்ஸ் பள்ளியில் கிரிக்கெட் ஆடிய நாள்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தை எழுத நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன். ரொம்பவே கவனமாகப் பார்த்து பார்த்து எழுதியிருக்கிறேன்.
இந்தியாவுக்கு மெட்ராஸூம் தமிழ்நாடும் எந்தளவுக்கு முக்கியம் என்ற புள்ளியை மையமாக வைத்துதான் இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். ராகுல் டிராவிட், சச்சின், கங்குலி ஆடிய காலத்திலும் இந்தியா தோற்கும். அப்போது அவர்களுடன் தோளோடு தோளாக நின்று போட்டியை இந்தியாவுக்காக வென்று கொடுக்க வேண்டும் என நினைப்பேன். ‘வானத்தைப் போல…’ படத்தில் வருவதைப் போல இந்திய அணியில் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து இருப்பார்கள் என நினைத்தேன். எல்லாருமே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், 2016 வரைக்குமே நான் எந்தத் தொடரில் ஆடுவதற்கு இந்திய அணியோடு பயணித்தாலும் எப்போது சென்னையின் தெருக்களுக்கு வருவோம், எப்போது வீடு வந்து சேருவோம் என்றுதான் இருக்கும்.
ஏனெனில், நாம் ஏனைய இந்தியாவோடு ரொம்பவே தொடர்பற்று இருக்கிறோம். தமிழகத்தில் நிறைய திறமையாளர்கள் இருந்தும் ஏன் இந்திய அணிக்கு ஆட முடியவில்லை எனக் கேட்பார்கள். அதற்கு நாம் ஏனைய இந்தியவோடு தொடர்பற்று இருப்பதுதான் முக்கிய காரணம்.
மெட்ராஸ் என்றால் என்ன, இந்த நிலத்தின் தன்மை என்னவென்பதை தமிழகத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தமிழகத்திலிருந்து வருபவர்கள் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர வைக்க வேண்டும். சிறுவயதில் எனக்கு பெரிதாக ஹிந்தி தெரியாது. பாக்யராஜின் ‘ரகு தாத்தா’ ஹிந்திதான் தெரியும். ஆனால், ‘ஹிந்தி தெரியாது போடா’ என்பதை விட ‘ஹிந்தியே தெரியாது அதைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பது கஷ்டம்தான் கொடுக்கும்’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டோமானால் சிறப்பாக இருக்கும்.

17 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் இருந்தபோது ஹிந்தி தெரியாத என்னை ஐன்ஸ்டைனைப் போல பார்த்தார்கள். ஐன்ஸ்டைனை அவர்களுள் ஒருவராகச் சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள் என்பதை அறியவே எனக்கு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்து வருபவர்களுக்கும் இவ்வளவு ஆண்டுகள் பிடிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன்” என்றார்
மேலும், 2011 உலகக்கோப்பைப் பற்றி பேசியவர், ‘உலகக்கோப்பைக்கு தேர்வானது ஒரு சுவாரஸ்யமான சம்பவம். நான் உலகக்கோப்பை அணியில் இருப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால், உறுதியாக எனக்கு தெரியாது. அப்போது கேப்டன் தோனியின் போன் நம்பரெல்லாம் என்னிடம் இல்லை. பேஸ்புக்கில் அவரோடு நண்பராக இருந்தேன். திடீரென அவர் ஆன்லைன் வந்தார். அவருக்கு ‘ஹாய்’ என மெசேஜ் செய்தேன். பதிலுக்கு ‘ஹாய்’ வந்தது. எனக்கு சந்தேகமாகிவிட்டது.

‘நீங்கள் உண்மையிலேயே தோனிதானே?’ என்றேன். ‘போய்…உலகக்கோப்பைக்கு தயாராகு!’ என தோனி ரீப்ளை செய்தார். அப்படித்தான் 2011 உலகக்கோப்பை அணியிலிருந்ததே முதன் முதலாக அறிந்துகொண்டேன்.’ என்றார்.