சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் நேற்று மீண்டும் வெளிநடப்பு செய்தனர். இந்நிலை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. பேரவைத் தலைவர் அப்பாவு, திருக்குறள் வாசித்துவிட்டு, கேள்வி நேரத்தில் முதல் கேள்வி தொடர்பாக அறிவித்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் எழுந்து, ‘‘கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அவையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்’’ என்று கோரினர்.
அப்போது பேரவைத் தலைவர் அப்பாவு, ‘‘கேள்வி நேரமானது மக்களுக்கானது, பலவிதமான கேள்விகளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் தந்துள்ளனர். அந்த நேரம் முடிந்தபின், நீங்கள் எந்த பிரச்சினையை எழுப்பினாலும் அதற்கு அனுமதி தருகிறேன். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தேவையான நேரம் தருகிறேன். நீங்கள் தாராளமாக பேசலாம். நினைத்த நேரத்தில் நினைத்த பொருள் பற்றி பேச முடியாது. முக்கியமான பிரச்சினை இருந்தால் பூஜ்ய நேரத்தில் பேசலாம்’’ என்றார். எனினும், அதிமுக உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டு தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
அப்போது பேசிய பேரவைத் தலைவர், ‘‘அவையை ஒத்தி வைக்க வேண்டும் என்றால் விதிகள்படி தீர்மானம் கொண்டு வரவேண்டும். விதிகளை திருத்த வேண்டும். உங்களது நெருக்கடிகளுக்காக அவையை பயன்படுத்தக் கூடாது. அனைவரும் அமருங்கள். மக்கள் பிரச்சினையை மட்டும் அவையில் பேசுங்கள். உங்கள் பிரச்சினைக்கு அவையை பயன்படுத்தக் கூடாது’’ என்றார்.
தொடர்ந்து கோஷம் எழுப்பிய அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய, பேரவைத் தலைவர் அப்பாவு, ‘‘நேற்று (ஜூன் 21) அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில், முதல்வர் கேட்டுக் கொண்டதன் பேரில் ஏற்றுக் கொண்டேன். அவைக்கு அவர்கள் வரவில்லை. தற்போதும் அவை நடவடிக்கையில் பங்கேற்க அவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று தெரியவில்லை. நாகரீகமாக அவையில் நடந்து கொள்ள வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.