இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?

2024, டி20 உலக கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் ஆஸ்திரேலியா அணி இருக்கிறது. இந்திய அணி வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு சென்றுவிடலாம், ஆஸ்திரேலியா அணி வெற்றியுடன் கூடுதல் ரன்ரேட்டும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம் அணிக்கு எதிராக நாளை காலை விளையாட இருக்கிறது. அப்போட்டியில் வெற்றி பெற்றாலே அந்த அணியால் உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட முடியும்.

ஒருவேளை ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றால் இரண்டு அணிகளுக்கும் ரன்ரேட் பார்க்கப்படும். அதில் முன்னிலை வகிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் அணியும் தோற்று, ஆஸ்திரேலிய அணியும் தோற்றால், அப்போது ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உருவாகும், இந்திய அணி நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நிலையில், இந்த மூன்று அணிகளுக்கும் ரன்ரேட் பார்க்கப்பட்டு, அதனடிப்படையில் முன்னிலை வகிக்கும் அணி டி20 உலக கோப்பை 2024 தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறும்.  

இப்போதைய சூழலில் வங்கதேசம் அணிக்கு மிகமிக சொற்ப வாய்ப்பு மட்டுமே இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இந்த வாய்ப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இதுஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலிய அணிக்கு மற்றொரு நெருக்கடி உருவாகியுள்ளது. அதாவது இந்திய அணிக்கு எதிரான போட்டி இப்போது மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெறும் நிலையில், அங்கு கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களாக கனமழை பெய்த நிலையில் போட்டிதொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கும் முன்பாக கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறது.

இது ஆஸ்திரேலிய அணிக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது. ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தினால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற சூழல் உருவாகும். அதனால், எக்காரணத்தைக் கொண்டு ஆஸ்திரேலிய அணி இப்போட்டி மழையால் பாதிக்கப்படக்கூடாது என வருண பகவானை வேண்டிக் கொள்ளும். அப்படியும் மீறி மழையால் பாதிக்கப்பட்டால், இந்திய அணியுடன் சேர்ந்து கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் அணி ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதுவரை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், மற்ற இரண்டு இடங்களுக்கு பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.