ராஜஸ்தானில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளிடம் இளைஞர் ஒருவர் அநாகரிகமாக நடந்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஜெய்ப்பூர் போலீஸார் அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். முன்னதாக, சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொருவராகக் காண்பித்து இவர்கள் ரூ.150, ரூ.200, ரூ.300, ரூ.500 என விலை குறிப்பிட்டு இளைஞர் பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்…!
அந்த இளைஞர் என்ன பேசுகிறார் என்று புரியாமல் வெளிநாட்டு பெண்களும் சிரித்தனர். பின்னர், X சமூக வலைதளப் பயனர் ஒருவர் அந்த வீடியோவை தனது பக்கத்தில் பதிவிட்டு, இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மோசமான அனுபவம் ஏற்பட இவர்களைப் போன்றவர்களே காரணம் என்றும், இந்த இளைஞரை ஜெய்ப்பூர் போலீஸார் கைதுசெய்ய வேண்டும் என்றும் ட்வீட் செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, இதில் நடவடிக்கை எடுத்த ஜெய்ப்பூர் போலீஸார் சம்பந்தப்பட்ட இளைஞரைக் கைதுசெய்தனர். இதுகுறித்து ஜெய்ப்பூர் போலீஸ் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “இன்ஸ்டாகிராம் மூலம் இணையத்தில் ஒரு ரீல் வைரலாகி வருகிறது. அதில் சில வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட குற்றவாளியைக் கைதுசெய்து போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 354, 505 (2), வணிகவரி சட்டம் 66D மற்றும் ராஜஸ்தான் சுற்றுலா வணிகச் சட்டம் 13 (1), 13 (2) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு சொந்தமான கடைகளில் பொருள்களை வாங்குமாறு சுற்றுலாப் பயணிகளை வற்புறுத்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறது.