டி20 உலகக்கோப்பையின் முக்கியமான சூப்பர் 8 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்திய அணி முதலில் பேட் செய்து வரும் நிலையில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய பௌலர்களை திணறடித்து அதிரடி வேட்டை நடத்தி 92 ரன்களை அடித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஸ்தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நாங்களும் முதலில் பந்துவீசத்தான் நினைத்தோம் என அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் அவரின் ஆட்டத்தில் எந்த குறையும் இல்லை. அதிருப்தியும் இல்லை. ஆஸ்திரேலிய பௌலர்களை வெளுத்துவிட்டார்.
ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் அவுட் சைடு தி ஆப் ஸ்டம்ப் திசையில் வீசப்பட்ட ஒரு பந்துக்கு பேட்டை விட்டு ஸ்லிப்பில் நின்ற வார்னரிடம் கேட்ச் கொடுத்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக அப்பீல் செய்தனர். ரிவியூவும் சென்றது. ரிவியூவ்வில் தெளிவாக பந்து தரையில் பிட்ச் ஆகி கேட்ச் ஆனது தெரியவந்தது. ரோஹித் தப்பித்தார். அடுத்த ஓவரில் ஹேசல்வுட் வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரியில் கோலி டக் அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரில்தான் ரோஹித் வெறியாட்டம் ஆடினார். இந்த ஓவரில் மட்டும் 29 ரன்கள் வந்திருந்தது. 4 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் ரோஹித் அடித்திருந்தார். ஸ்விங்குக்கு முயற்சி செய்து ஃபுல் லெந்தில் வீசவே ஸ்டார்க் முயன்று கொண்டிருந்தார். ஸ்விங்கெல்லாம் ஆகவே இல்லை. ஸ்லாட்டில் விழுந்த பந்துகளை அலேக்காக சிக்சர்களாக மாற்றினார் ரோஹித். ஆஸ்திரேலிய அணி அரண்டு போனது.
கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் முட்டி போட்டெல்லாம் சிக்சரை பறக்கவிட்டார். 19 பந்துகளிலேயே அரைசதத்தைக் கடந்தார். அணி மொத்தமாக 52 ரன்களை எடுத்திருந்த சமயத்திலேயே ரோஹித் 50 ரன்களை எடுத்துவிட்டார். அரைசதத்தை கடந்த பிறகும் பவர்ப்ளே முடிந்த பிறகும் கூட ஆடம் ஜம்பாவின் ஓவரிலும் சிக்சரை பறக்கவிட்டார். ஸ்டாய்னிஸின் ஓவரில் இறங்கி வந்து பவுண்டரி. ஷார்ட் பிட்ச் டெலிவரியை அலேக்காக மடக்கி சிக்சர், இறங்கி வந்து கவர்ஸில் சிக்சர் என ரோஹித் ருத்ர தாண்டவம் ஆடினார்.
‘அட்டாக்கிங்காக அதிரடியாக ஆட வேண்டும் என்பது பற்றி நான் பல நாட்களாக பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது கடுமையாக முயன்று அதற்கு செயலூக்கம் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி.’ என்றார்.

வீரர்கள் க்ரீஸூக்குள் வர வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல் அதிரடியாக ஆடி சிக்சர்களை பறக்கவிட வேண்டும். ஆளுக்கு 20-30 ரன்களை அடித்தால் கூட போதும். ஆனால், விரைவாக அடிக்க வேண்டும். இதுதான் ரோஹித் சொல்ல வரும் செய்தி. இதை அணியின் தலைவனாக முன் நின்று ரோஹித் செய்தும் காட்டியிருக்கிறார். கடந்த ஓடிஐ உலகக்கோப்பையிலுமே கூட ரோஹித் இப்படியான அணுகுமுறையோடுதான் ஆடியிருந்தார். முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளேயில் விக்கெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் அணிக்காக அதிரடியாக ஆடிக்கொடுத்திருப்பார். அந்த உலகக்கோப்பையில் 597 ரன்களை 125 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். அந்த உலகக்கோப்பையில் அதிக ரன்களை அடித்த டாப் 10 வீரர்களில் ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட்தான் இருப்பதிலேயே அதிகம்.
ஆக, இப்படி எடுத்தவுடனேயே அதிரடியாக ஆடும் அணுகுமுறை ரோஹித்திற்கு ஒன்றும் புதிதல்ல. இந்த உலகக்கோப்பையிலும் அதே ரோலில்தான் ஆட முற்பட்டார். ஆனால், அது சரியாக அவருக்கு கைகூடாமலே இருந்தது. அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு அவர் சோபிக்கவே இல்லை. இதில் கூடுதலாக கவனிக்க வேண்டியது இந்த உலகக்கோப்பையில் 3 முறை ரோஹித் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களிடம் அவுட் ஆகியிருந்தார். ஷாகீன் அப்ரிடி, சவுரப், ஃபரூக்கி ஆகியோர் ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர். ஒரே மாதிரியாக வேறு பேட்டை விட்டு அவுட் ஆகியிருந்தார். விராட் கோலியும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திணறக்கூடியவர். இவர்களை மனதில் வைத்துதான் கடந்த போட்டியில் ட்ராப் செய்யப்பட்டிருந்த ஸ்டார்க்கை மார்ஸ் இந்தப் போட்டியில் லெவனுக்குள் கொண்டு வந்தார். ஸ்டார்க்கை ஒரு பெரிய ஆயுதமாக ஆஸ்திரேலியா பார்த்தது. அவர் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை எடுத்திருந்தால் ரோஹித் அவரிடம் வீழ்ந்திருந்தால் இந்தியாவுக்கு அது பின்னடைவாக இருந்திருக்கும். ஆனால், ரோஹித் அதற்கு இடம் கொடுக்கவில்லை. துணிச்சலாக பாசிட்டிவ்வாக ஆடி ஸ்டார்க்கை கதிகலங்க வைத்தார். ஆனால், நகைமுரணாக அதே ஸ்டார்க்கிடம்தான் கடைசியில் விக்கெட்டையும் விட்டார்.

ஒரு யார்க்கரில் போல்டை பறிகொடுத்து 41 பந்துகளில் 92 ரன்களில் அவுட் ஆகினார். மொத்தமாக 7 பவுண்டரிகளையும் 8 சிக்சர்களையும் அடித்திருந்தார்.

ரோஹித்தின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கே ஒரு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது.