‘இந்த கால் மிஸ்டர் மூர்த்திக்கானதாக இருக்கும். தவறுதலாக, தெரியாமல், மிசஸ் மூர்த்திக்கு அழைத்திருக்கிறார்கள்’ என்று, தான் அப்துல் கலாமிடமிருந்து வந்த அழைப்பிற்கு பதில் கூறியதை தற்போது பகிர்ந்திருக்கிறார், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணனின் மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதா நாராயணன்.
கடந்த மார்ச் மாதம், சுதா நாராயணன் குடியரசு தலைவரால் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் தனது X பக்கத்தில், அப்துல் கலாம் தனக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கிய புகைப்படத்தை பதிவிட்டதுடன், அவருடனான தொலைபேசி உரையாடல் குறித்த நினைவையும் பகிர்ந்துள்ளார்.
Once I received a call from Mr. Abdul Kalam, who told me that he reads my columns and enjoys them. pic.twitter.com/SWEQ6zfeu4
— Smt. Sudha Murty (@SmtSudhaMurty) June 25, 2024
அதில், “ஒரு நாள், அப்துல் கலாம் உங்களிடம் பேச விரும்புகிறார் என ஓர் அழைப்பு வந்தது. அப்துல் கலாம் என்னிடம் பேச வேண்டிய காரணம் எதுவும் இல்லாததால், ‘இந்த கால் மிஸ்டர் மூர்த்திக்கானதாக இருக்கும்… நீங்கள் தவறுதலாக மிசஸ் மூர்த்திக்கு போன் போட்டிருக்கிறீர்கள்’ என்று கூறினேன். ஆனால், தொலைபேசி ஆபரேட்டரோ, அப்துல் கலாம் எனக்கு தான் போன் செய்யக் கூறியதாகக் கூறினார். எனக்கு ஒரே அதிர்ச்சி.
நான் அந்த சமயத்தில் ‘IT Divide’ பற்றி கட்டுரை (Column) ஒன்றை எழுதியிருந்தேன். அதில், “ஒரு நாள் ஏதோ வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். அங்கே இருந்த ஒரு டசன் மாம்பழத்தின் விலையை விசாரித்தபோது ரூ.100 என்று கடைக்காரர் கூறினார். சிறிது நேரத்திலேயே, என் மாணவி மற்றும் எங்கள் கம்பெனியில் பணிபுரியும் சாஃப்ட்வேர் இன்ஜீனியரான பெண், மாம்பழத்தின் விலையை விசாரிக்க, கடைக்காரர் மாம்பழத்தின் விலை ரூ.200 என்று கூறினார். அந்தப் பெண்ணும் ரூ.200 கொடுத்து வாங்கிச் சென்ற பின், ‘ஏன் அவருக்கு அதிக விலை கூறினீர்கள்?’ என்று கேட்டபோது, ‘நீங்கள் பள்ளி ஆசிரியர். அவர் ஐ.டியில் பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறார்’ என்று கடைக்காரர் பதிலளித்தார். இதைத்தான் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தேன்.

இதைப் படித்துவிட்டுதான் அப்துல் கலாம் என்னுடன் பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார். போனில் அப்துல் கலாம், “உங்கள் கட்டுரையை படித்து நன்றாக சிரித்தேன். எப்போது உங்கள் கட்டுரை வந்தாலும் தவறாமல் படித்துவிடுவேன்” என்று கூறினார்.
இவ்வாறு தனது X பக்கத்தில் சுதா நாராயணன் நினைவலையை பகிர்ந்திருக்கிறார்.