மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்ந்து நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் திரைத்துறையின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் கே.பாலசந்தர், ரஜினிகாந்த்தையும், கமல் ஹாசனையும் வைத்துப் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். 9 தேசிய விருதுகள், 12 ஃபிலிம்ஃபேர் விருதுகள், தாதா சாகேப் பால்கே விருது போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இன்று பலரும் கே. பாலசந்தர் குறித்து நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் கே. பாலசந்தரை நினைவு கூர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் கே. பாலசந்தர் குறித்துப் பேசிய கமல்ஹாசன், “நான் அவரைப் பற்றிப் பேசாத நாளே இல்லை என்பதுதான் உண்மை. என் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார் என்பதற்காக மட்டும் போற்றப்பட வேண்டியர் அல்ல அவர். பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அதனால் தனக்கு எந்த பயனும் இல்லை தன்னுடைய தொழிலுக்குத்தான் பயன் என்பதைத் தெரிந்தே செய்தார். அந்தளவிற்கு, விடாமுயற்சியாகப் புதுமைகளையும், புதுமுகங்களையும் அறிமுகப்படுத்திய வேறு இயக்குநர் என் நினைவிற்கு வரவில்லை. இந்தத் துறையில் 60 வருடங்கள் நான் பயணித்திருக்கிறேன்.
Thank you #KBSir. இன்று அவரது பிறந்த நாள். அவர் புகழ் ஓங்குக! pic.twitter.com/NrL4sQOobj
— Kamal Haasan (@ikamalhaasan) July 9, 2024
என்னுடன் அவர் பயணிக்காமல் இருந்திருந்தாலும் அவருடைய பெயர் விடுபடாது. குறிப்பாக என் வாழ்வில் என்னைப் போன்ற பலரின் வாழ்வில் அவர் செய்தவற்றை மறக்கவே முடியாது. என்னைப்போல் பல கலைஞர்களை உருவாக்கி எங்களுடனே இருக்கிறார். இன்று அவருக்குப் பிறந்த நாள். எங்களுக்கு இத்துறையில் அறிவு வளர்ந்த நாள்” எனப் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.