India vs Pakistan Cricket News Updates :அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐசிசிக்கு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்திய அணியை அனுப்ப முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளவில்லை. எந்த காரணமாக இருந்தாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துப்பூர்வ கடிதத்தையும், இந்திய அரசு அனுமதி மறுத்ததற்கான சான்றையும் கொடுக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) வலியுறுத்தியுள்ளதாம்.
பிசிசிஐ லெட்டர் கொடுக்கணும்
இந்த காரணத்துக்காக தான் நாங்கள் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்பதை வெறுமனே சொல்லாமல், அதிகாரப்பூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்க வேண்டும் எனவும் ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வந்து விளையாடினால், முழு பாதுகாப்பை வழங்க தயாராக இருக்கிறோம், அந்த அணி அனைத்து போட்டிகளையும் லாகூரிலேயே விளையாடிக் கொள்ளலாம் என்பதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் தெரிவித்திருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐசிசி நிலைப்பாடு என்ன?
இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் மீட்டிங்கில் ஐசிசி கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்பது குறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்க இருக்கிறது. அத்துடன் ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்தவும் வலியுறுத்த இருக்கிறது. ஐசிசி பொறுத்தவரையில், ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்தினால் செலவு அதிகமாகும் என்பதையும், அதனால் அப்படியான பிளான் இதுவரை எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் வாரியம், ஹைபிரிட் மாடலுக்கு ஆகும் செலவை பங்கிட்டு கொள்ளக்கூட தயாராக இருப்பதாக தெரிகிறது.
சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை
இதனால், இப்போது வரை இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்பது உறுதியாகவில்லை. இந்த தொடருக்காக பாகிஸ்தான் தயாரித்திருக்கும் உத்தேச பட்டியலின்படி, கராச்சியில் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் போட்டிகள் மார்ச் 9 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இரண்டும் லாகூரில் நடக்க இருக்கிறது.