ம.பி: விவசாய நிலத்தில் நெடுஞ்சாலை; இழப்பீடு பெற அவசரகதியில் 30 நாள்களில் கட்டப்பட்ட 2,500 வீடுகள்!

நெடுஞ்சாலைகள் பொதுவாக விவசாய நிலத்திற்குள் செல்வது வழக்கம். புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் போது அந்த வழித்தடத்தில் இருக்கும் வீடுகளுக்கு கணிசமான இழப்பீடு கொடுக்கப்படுவது வழக்கம். மத்திய பிரதேசத்தில் அது போன்று ஒரு நெடுஞ்சாலை வருவதை தெரிந்து கொண்ட கிராம மக்கள், அவசர அவசரமாக நெடுஞ்சாலை வரக்கூடிய வழித்தடத்தில் வீடுகளை கட்டியுள்ளனர். சிங்ராலி-பிரயாக்ராஜ் இடையே ரூ.759 கோடியில் நெடுஞ்சாலை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 70 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் இச்சாலை சிங்ராலி மாவட்டத்தில் 33 கிராமங்கள் வழியாக சென்றது. இக்கிராமங்களில் இது தொடர்பாக அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துவதற்காக சர்வே எடுக்க ஆரம்பித்தனர். விவசாய நிலம் வழியாக அந்த நெடுஞ்சாலை சென்றது. நிலத்திற்கு இழப்பீட்டு தொகை குறைவாகவும், வீட்டிற்கு அதிகமாகவும் கொடுக்கப்படும் என்று அரசு தெரிவித்தது. உடனே உள்ளூர் அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினரின் துணையோடு புரோக்கர்களின் ஒத்துழைப்பில் நெடுஞ்சாலை செல்லும் வழித்தடத்தில் கிராம மக்கள் அவசர அவசரமாக வீடுகளை கட்ட ஆரம்பித்தனர்.

அதுவும் வெறும் 4 அடி சுவர் கட்டி மெல்லிய கான்கிரீட் கூரை போட்டனர். வீட்டிற்குள் குழந்தைகள்கூட உள்ளே செல்ல முடியாது. டிரோன் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டதில் நெடுஞ்சாலை வரும் வழித்தடத்தில் புதிய வீடுகள் உருவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதமே நிலம் கையகப்படுத்தும் வேலை தொடங்கிவிட்டது. அதன் பிறகு புதிய வீடுகள் கட்ட தடை விதிக்கப்பட்டது. ஆனால் புரோக்கர்களின் துணையோடு அதிகாரிகளை சமாளித்து புதிய வீடுகளை கட்டினோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். அதுவும் வீட்டிற்கு அதிக இழப்பீடு கொடுப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து ஒரு மாதத்தில் 2,500 வீடுகள் அவசரமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்கு முன்பு இருந்த நிலத்தின் விலை கணக்கெடுப்பு தொடங்கிய பிறகு, மதிப்பு 10 மடங்கு அதிகரித்தது.

நெடுஞ்சாலை வரக்கூடிய இடத்தில் நிலம் இருந்தால் அதன் உரிமையாளருக்கு நிலத்திற்கு மட்டும் இழப்பீடு கிடைக்கும். ஆனால் வீடு இருந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இடிக்கப்படும் வீட்டிற்கு மாற்று வீடு வழங்கப்படும். இது தவிர வீடு இருக்கும் இடத்தில் போர்வெல், அடிபம்ப், மரம் போன்றவை இருந்தால் அதற்கு தனியாக இழப்பீடு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், அவசர வீடுகள் புற்றீசல் போல் முளைக்க ஆரம்பித்து விட்டது. நில உரிமையாளர்கள் அடுத்தவர்களை தங்களது நிலத்தில் வீடு கட்ட அனுமதி கொடுத்து அரசு கொடுக்கும் இழப்பீட்டு தொகையில் 20 சதவீதத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். இது குறித்து மண்டல துணை நீதிபதி சுரேஷ் கூறுகையில், ”கூட்டு கணக்கெடுப்பில் 500 பழைய வீடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது புதிதாக 3,500 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படாது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.