எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய நிதி அமைச்சுக்கு முடியும் என்றும், அவசியத்திற்கு இணங்க அந்நிதியை வழங்குவதற்கு தயார் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
2024 வரவு செயலவுத் திட்டத்தின் ஊடாக எந்தவொரு தேர்தலை நடாத்துவதற்காகவும் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதாகவும், அவ்வாறு நிதி வழங்கும் செயற்பாடு எவ்வித தடைகளுமின்றி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆரம்பமாக தபால், அச்சு மற்றும் பாதுகாப்பிற்கான செலவுகளை வழங்குவதற்குத் தயாராக உள்ளதுடன், அவசியமாயின் சம்பந்தப்பட்ட பணத்தை விடுவிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக அமைச்சர் விபரித்தார்.
இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று (18) கலந்துரையாடியதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நிதி ஒதுக்கீடு செய்தல் உட்பட பல விடயங்;கள் தொடர்பாக ஆராயப்பட்டது.