நாட்டில் ஐ.டி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் நகரங்களில் புனேயும் ஒன்றாகும். இங்கு அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் இருக்கிறது. இதனால் விபத்துகளுக்கும் பஞ்சம் இருக்காது. புனேயை சேர்ந்த சேர்ந்த ஷெர்லின் டிசில்வா (27) இரண்டு குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் பாஸன்-பனேர் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரது ஸ்கூட்டருக்கு பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அக்கார் ஸ்கூட்டரை முந்திச் செல்ல முயன்றது. ஆனால் அதற்கு போதிய வழி கிடைக்கவில்லை. இதையடுத்து காரை வேகமாக ஓட்டி வந்து ஸ்கூட்டருக்கு முன்பு நிறுத்திய கார் ஓட்டுநர் ஸ்வப்னில் (57), கோபத்தில் ஷெர்லினிடம் வாக்குவாதம் செய்து, ஷெர்லின் முடியை பிடித்து இழுத்து அவரது முகத்தில் இரண்டு முறை குத்தினார். இதில் ஷெர்லின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. ஸ்வப்னில் தனது கார் முந்திச் செல்ல ஷெர்லின் இடம் கொடுக்காத காரணத்தால் இவ்வாறு நடந்து கொண்டார்.

சோசியல் மீடியா பிரிவில் பணியாற்றும் ஷெர்லின் இது தொடர்பாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது ஸ்கூட்டருக்கு பின்னால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காருக்கு வழிவிடும் விதமாக எனது ஸ்கூட்டரை சாலையின் இடதுபக்கமாக ஓட்டினேன். அப்படி இருந்தும் காரை எனது வாகனத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்தி, அதில் இருந்து இறங்கி வந்த வயதானவர் குழந்தைகள் என்னுடன் இருப்பதை பற்றி கவலைப்படாமல் என்னை முடியை பிடித்து இழுத்து முகத்தில் இரண்டு குத்து குத்தினார். எனது மூக்கில் ரத்தம் வந்தது. ஏன் மக்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். நகரில் என்ன பாதுகாப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு எதாவது நடந்திருந்தால் என்ன ஆவது. அந்த வழியாக சென்ற ஒரு பெண் எனக்கு உதவி செய்தார்” என்றார்.

இது குறித்து ஷெர்லின் சித்தப்பா விஷால் கூறுகையில், ”இச்சம்பவத்திற்கு பிறகு எனக்கு போன் செய்து காரணமே இல்லாமல் தன்னை காரில் வந்தவர் அடித்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தார். ஸ்கூட்டர் காரை தொடவே இல்லை. தனது பலத்தை காட்ட இது போன்று செய்துள்ளார். காரில் அவரது மனைவியும் இருந்தார். ஆனால் அதனை அப்பெண் தடுக்க முன்வரவில்லை. இச்சம்பவத்தால் குழந்தைகள் அதிர்ச்சியாகிவிட்டனர்” என்றார். அப்பெண்ணை அடித்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து ஸ்வப்னில் தப்பித்துச் செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் அங்கு சிலர் கூடினர். அதோடு ஷெர்லின் கார் சாவியை எடுத்துக்கொண்டார். சிறிது தூரத்தில்தான் போலீஸார் நின்றனர். அந்த வழியாக வந்த ஒரு தம்பதி ஷெர்லினுக்கு உதவி செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து ஸ்வப்னில் மற்றும் அவரது மனைவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து ஷெர்லினிடம் விசாரித்த போது, ”நான் எனது பக்கத்து வீட்டு குழந்தைகள் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு உணவகம் ஒன்றுக்கு சாப்பிட சென்று கொண்டிருந்தேன். அந்நேரம் ஸ்கூட்டர் மீது கார் ஒன்று சேற்றை வாரி இறைத்தபடி சென்றது. உடனே காரை ஒழுங்காக ஓட்டுங்கள் என்று கார் டிரைவரிடம் சொன்னேன். நான் அப்படி சொன்னவுடன் எனது ஸ்கூட்டரை பின் தொடர்ந்து வந்து என்னை தாக்கினார்” என்றார். ஷெர்லின் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்.
இரண்டு மாதத்திற்கு முன்புதான் 17 வயது மைனர் சிறுவன் குடிபோதையில் கார் ஓட்டி இரு சக்கர வாகனத்தில் மோதினார். இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.