புதுடெல்லி: காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் ரஷ்யாவின் ஏ.கே. ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தன. இந்த ரக துப்பாக்கிகளை பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளுக்கு வழங்கி வந்தது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் கைசர் கோகா கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து எம்4 கார்பைன் ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இது அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி ஆகும்.
கடந்த 2021-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் வெளியேறியபோது ஏராளமான ஆயுதங்களை ஆப்கானிஸ்தானில் விட்டுச் சென்றனர். அவற்றில் எம்4 கார்பைன் ரக துப்பாக்கிகளும் அடங்கும். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உதவியுடன் அந்த துப்பாக்கிகள், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு கைமாறியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 17-ம் தேதி காஷ்மீரின் கெரன் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஸ்டெயர் ஏயுஜி ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது ஆஸ்திரியா நாட்டின் அதிநவீனதுப்பாக்கி ஆகும். இந்த ரக துப்பாக்கி பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்பாட்டில் இருக்கிறது. இதன்மூலம் தீவிரவாதிகளுடனான பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்பு அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வந்தது. ஆனால் அண்மை காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் காஷ்மீரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 12 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
காஷ்மீர் தீவிரவாதிகள் பெரும்பாலும் ரஷ்ய தயாரிப்பான ஏ.கே. ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தனர். தற்போது அவர்கள் அமெரிக்காவின் எம்4 கார்பைன், ஆஸ்திரியாவின் ஸ்டெயர் ஏயுஜிரக துப்பாக்கிகளை பயன்படுத்துவது பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. ஆஸ்திரியாவின் ஸ்டெயர் ஏயுஜி ரக துப்பாக்கிகள் பல்வேறு நாடுகளின் ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ வீரர்கள் இந்த ரக துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆஸ்திரிய துப்பாக்கிகளை வழங்கி வருவது உறுதியாகி உள்ளது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.