ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணி இதுவரை 5 கோப்பைகளை வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில சீசன்களாக படுதோல்வியை சந்தித்து வந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணியின் கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். இந்த சம்பவம் ஐபிஎல் 2024 முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் இதற்கான எதிர் வினையை மைதானங்களில் வெளிப்படுத்தினர்.

புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டாலும் மும்பை அணி பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலக வாய்ப்புள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மாஸ் தலைமையில் சமீபத்தில் டி20 உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றது. தோனிக்கு பிறகு மிகவும் வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் சர்மா பேசப்பட்டு வருகிறார். எனவே அவர் எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஹர்திக் பாண்டியா தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல்லிலும் இதே முறை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளனர், எனவே மும்பை நிர்வாகமும் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு சூர்யகுமார் யாதவை புதிய கேப்டனாக நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தவிர டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பந்த் அந்த அணியை விட்டு விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் கேஎல் ராகுல், ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.  

ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகிய மூன்று பேருக்கும் அணி நிர்வாகத்துடன் மோதல் ஏற்பட்டுள்ளதே இந்த முடிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. ஒருசில அணிகள் 5 முதல் 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி கேட்கின்றனர், ஒரு சிலர் மொத்தமாக புதிய அணியை எடுக்க விரும்புகின்றனர். அதற்குள் ஒவ்வொரு வீரர்களும் வேறு அணிக்கு செல்லவுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இவை எதுவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் என்பதால் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெறும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.