மீண்டும் கிரிக்கெட் விளையாடும் தினேஷ் கார்த்திக்! ஓய்வு முடிவை மாற்றியுள்ளார்!

Dinesh Karthik to play SA20: இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருந்த கார்த்திக் தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார். ஆனால் இந்த முறை இந்தியாவிற்காக அல்ல. ஐபிஎல் 2024 தொடருடன் ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் லீக் தொடரான SA20 தொடருக்கு பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டார். 

அதனை தொடர்ந்து தற்போது SA20 லீக்கில் உள்ள பார்ல் ராயல்ஸ் அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாட உள்ளார். இந்த அறிவிப்பு மூலம் SA20 லீக் போட்டியில் விளையாடும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக். இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள கார்த்திக், “ஒரு வீரராக களம் திரும்புகிறேன்… ஆனால் இந்த முறை ஆப்பிரிக்காவுக்காக” என்று பதிவிட்டுள்ளார். SA20 லீக் தொடரில் உள்ள அணி உரிமையாளர்கள் ஏற்கனவே, ஐபிஎல் தொடரிலும் தங்கள் அணிகளை வைத்துள்ளனர். அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்கள் தான் SA20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் என்ற அணியை வைத்துள்ளனர். அந்த அணியில் தான் தற்போது தினேஷ் கார்த்திக் விளையாட உள்ளார். 39 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் தினேஷ் கார்த்திக் தற்போதும் நல்ல பார்மில் உள்ளார்.

Entering the ground again as a player. This time in A https://t.co/Snn910oIcg

— DK (@DineshKarthik) August 6, 2024

இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரிலும் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இடம் பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் பல போட்டிகளை தனி ஒருதராக முடித்து கொடுத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 17 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ளார் தினேஷ் கார்த்திக். மொத்தம் 257 போட்டிகளில் விளையாடி 135 ஸ்ட்ரைக் ரேட்டில் 4842 ரன்கள் அடித்துள்ளார். இவரின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 97 ஆகும். SA20ல் பார்ல் ராயல்ஸில் இணைந்தது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “தென்னாப்பிரிக்காவில் விளையாடியது மற்றும் அங்கு பயணம் செய்தது குறித்த நிறைய நினைவுகள் எனக்கு உள்ளன, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததும், என்னால் அதை மறுக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார். SA20 லீக்கின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 8 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.