2025-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வெற்றிகரமாக தாக்கல் ஆகி முடிந்துள்ளது.
இந்தப் பட்ஜெட் மூலம் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.
2019-ம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தப்போது முழு நேர நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
கடந்த ஆண்டு, இவர் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டுடன், இதுவரை மொத்தம் 8 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
2020-ம் ஆண்டு, இவர் பட்ஜெட் தாக்கலின் போது இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் பேசினார். இதுவரை இந்திய வரலாற்றில் மிக நீளமான பட்ஜெட் ஆகும். இரண்டு மணிநேரத்திற்கு மேல் பேசியிருந்தாலும், அப்போதும் முழுவதுமாக பட்ஜெட் படித்து முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2019-ம் ஆண்டு, இவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இரண்டு மணிநேரம் 17 நிமிடங்கள் நீண்டது. 2021-ம் ஆண்டு ஒரு மணிநேரம் 50 நிமிடங்களும், 2022-ம் ஆண்டு ஒரு மணி நேரம் 32 நிமிடங்களும், 2023-ம் ஆண்டு ஒரு மணிநேரம் 27 நிமிடங்களும், கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஒரு மணிநேரம் 25 நிமிடங்களும் நீண்டது.
இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அவர் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். இதுவரை அவர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் மிக குறைந்த மணிநேர பட்ஜெட் இதுவாகும்.