அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள மில்கிபூரில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதே அயோத்தியின் ஃபைசாபாத் தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடித்து சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தனித்தொகுதியான மில்கிபூரில் பாஜக சார்பில், சந்திரபானு பஸ்வானும், சமாஜ்வாதி கட்சி சார்பில் அஜித் பிரசாத்தும் களத்தில் உள்ளனர். இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அவதேஷ் பிரசாத், கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஃபைசாபாத்தில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளரான லல்லு சிங்கை, 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அயோத்தியில், ராமர் கோயில் திறப்புக்கு பின்பு பாஜக எளிதாக வென்று விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சமாஜ்வாதி கட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வெற்றியை ருசித்திருந்தது. அக்கட்சியின் அவதேஷ் பிரசாத் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாதல் மில்கிபூர் பேரவைத் தொகுதி காலியானது. அதன் காரணமாக இந்தத் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் அவதேஷின் மகன் அஜித் பிரசாத்தை சமாஜ்வாதி கட்சி களமிறக்கியுள்ளது.
இதனிடையே இடைத்தேர்தல் குறித்து அயோத்தி சரக ஐஜி பிரவீன் குமார் கூறுகையில், “அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வதந்திகள் பரப்புபவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன்பு நடந்த 9 தொகுதிகள் இடைத்தேர்தலில் பாஜக ஆறில் வெற்றி பெற்றிருந்தது. சமாஜ்வாதி கட்சி இரண்டு இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 1.93 லட்சம் ஆண் வாக்களர்கள், 1.78 லட்சம் பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர் இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள். இதில், 4,811 பேர் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சி இண்டியா கூட்டணி தோழமையான சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவளித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் விட்டதை இடைத்தேர்தலில் பிடிக்க பாகஜ மாநிலத்தின் இரண்டு துணை முதல்வர்களையும் பிரச்சாரத்துக்கு அனுப்பி இருந்தது. சமாஜ்வாதி கட்சிக்காக அதன் மைன்பூர் எம்.பி.யும், கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.