தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் – 41 புதிய திட்டங்கள் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் 2025 – 2026 நிதியாண்டுக்கான ரூ.7.45 கோடி உபரி வருவாய் பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று (பிப்.27) தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கத்தில் இன்று நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 2025- 2026 நிதியாண்டுக்கான உத்தேச வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியது:

வருவாய் நிதி: “தூத்துக்குடி மாநகராட்சியில் 2025- 2026 நிதியாண்டில் வருவாய் நிதியில் சொத்து வரி, இதர வரி, வரியில்லா இனங்கள், முத்திரை கட்டணம், கேளிக்கை வரி, அரசு மானியம், மாநில பகிர்மான நிதி, 15-வது நிதி குழு மானியம் மற்றும் ஏனைய வருமானங்கள் என மொத்தம் ரூ.17126.09 லட்சம் வருவாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர்பான செலவுகள், நிர்வாக செலவினங்கள், சாலை, கட்டிடங்கள் மற்றும் இதர பராமரிப்பு, இயக்க செலவினங்கள், நிதி மற்றும் இதர செலவினங்கள், பொது நிதி பங்களிப்பு என மொத்தம் ரூ.16831.50 லட்சம் செலவாகும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.294.59 லட்சம் உபரியாக வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநீர், வடிகால் நிதி: குடிநீர் வரி, பயன்பாட்டு கட்டணம் மற்றும் இதர வருமானம் என மொத்தம் ரூ.6532.88 லட்சம் வருமானமாக பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சம்பளம் மற்றும் ஓய்வூதியர் செலவினங்கள், குடிநீர் பணி இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவினங்கள், நிர்வாக மற்றும் இதர செலவினங்கள், நிதி செலவினங்கள் என மொத்தம்ரூ.6299.65 செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உபரியாக ரூ.233.23 லட்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப கல்வி நிதி: கல்வி வரி, இதர வருமானம் என மொத்தம் ரூ.810.47 லட்சம் வருமானம் கிடைக்கும் எனவும், அதில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவினங்கள், நிர்வாக செலவினங்கள் மற்றும் இதர செலவினங்கள் என மொத்தம் ரூ.593 லட்சம் செலவாகும் எனவும் தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உபரியாக ரூ.217.47 லட்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2025- 2026-ம் நிதியாண்டில் மொத்தமாக ரூ.745.29 லட்சம் உபரி வருவாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

41 புதிய திட்டங்கள்: மேலும், 2025 – 2026-ம் ஆண்டில் வடக்கு மண்டலத்தில் புதிய மகளிர் பூங்கா, 5 இடங்களில் சிறு விளையாட்டு மைதானங்கள், ரூ.10 கோடியில் மைய நூலக கட்டிடம், புதிய நீச்சல் குளம், உணவுத் தெரு, வல்லநாட்டில் 1.2 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி, மழைநீரை சேமிக்கும் வகையில் 4 குளங்கள் சீரமைப்பு, போதை பொருள் மறுவாழ்வு மையம், துறைமுக கடற்கரை பூங்கா ரூ.8 கோடியில் மேம்பாடு, தெற்கு கடற்கரை சாலையில் நடைபாதை, 24 மணி நேரமும் குடிநீர் விநியோகத்துக்கான பணிகள், மூன்று இடங்களில் முதியோர் பூங்கா, புதிய மீன் சந்தை, 20 இடங்களில் நகர்ப்புற குறுங்காடுகள், தருவைகுளம் உரக்கிடங்கில் 100 ஏக்கரில் மரக்கன்று நடுதல், 9 அங்கன்வாடி மையங்கள், இளைஞர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம், சிறிய செயற்கை புல் கால்பந்து மைதானம், அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் இரவு உணவு வழங்குதல் உள்ளிட்ட 41 திட்டங்கள் வரும் நிதியாண்டில் நிறைவேற்றப்படும்” என்றுமேயர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.