மகளிர் தினத்தையொட்டி பல நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. பல நிகழ்வுகள் சந்தோஷமாகவும் ஒரு கொண்டாட்டமாகவும் கடந்ததுண்டு. ஆனால் மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான புரிதல் இருப்பவர்கள் வெகு சிலரே. அப்படி நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வு தான் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், ராமாபுரத்தின் தமிழ் துறை நடத்திய கருத்தரங்கம். இதில் எழுத்தாளர், ஆசிரியர், நாடக கலைஞர் எனப் பன்முகத்தன்மையுடன் சமூகத்தில் களமாடி வரும் மரக்கா கலந்து கொண்டு, “பாலின சமத்துவமும் திருநர் பிரதிநிதித்துவமும்” என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். தற்போது இவர் பூந்தமல்லியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முதலில் மரக்காவுக்கு நினைவு பரிசினை கல்லூரி டீன் வழங்கினார். பிறகு தலைமை உரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய கவிஞர் மரக்கா, சிந்தனைகளையும் கேள்விகளையும் எழுப்பும் வகையில் பேசினார்.
மூன்றாம் பாலினத்தை ஏற்றுக்கொள்வதை பற்றி பேச ஆரம்பித்த அவர், “எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதை தெரிந்துகொண்ட பிறகே பிடிக்கும் பிடிக்காது என்ற முடிவுக்கு வரவேண்டும். தெரிந்துகொள்ளாமலே பிடிக்காது என்று ஒதுக்குவது அபத்தம். குயர் மக்களை பற்றி தெரிந்துகொள்ளாமலே அவர்களை ஒதுக்குவது என்பது இது போன்ற அபத்தமான ஒரு செயல் தான். முதலில் ஒரு விஷயத்தை அதுவாக ஏற்றுக்கொள்ளுங்கள், அதை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். பிறகு அதிலிருந்து கற்றுக்கொள்ள முயலுங்கள். இந்த சமூகத்தில் குயர் மக்களும் ஒரு அங்கம் என்பதை ஏற்றுக்கொள்வது, மதிப்பது, கற்றுக்கொள்வது என்பதே ஒரு மனிதனாக நீங்கள் செய்ய வேண்டியது. எல்லாருமே மனிதர்கள் தான் அனைவருமே இந்த உலகத்தில் வாழ தகுதியானவர்கள் தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னை போல படித்தும் வேலை கிடைக்காமல் அதாவது வேலை மறுக்கப்பட்டு பாலினத்தை மட்டுமே காரணமாக கொண்டு ஒடுக்கப்படும் தோழர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முதுகலை பட்டம் பெற்ற ஒரு திருநங்கை பிச்சை எடுத்து கொண்டிருக்கிறாள். சனி ஞாயிறு அன்று ஒரு என்.ஜி.ஓ விற்கு கணக்கு எழுதி கொடுக்கிறார். இப்படி முறையான எந்த வாய்ப்புகளும் கொடுக்காத இந்த சமூகம் கை கால் நன்றாக இருந்தும் ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று கேள்விகளை எழுப்புவது என்பது முறையானதா?
இது மட்டுமல்ல படித்து வேலைக்கு போனாலும் அங்கு ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறோம். இப்படியாக எங்களை எங்களாகவே ஏற்றுக்கொள்வதில் இந்த சமூகத்திற்கு ஏதோ பிரச்னையாகவே இருந்துகொண்டேதான் இருக்கிறது. இதனை மாற்றுவதற்கு திருநர்களுக்கான பிரதிநிதித்துவம் மிக முக்கியமானதாக கருதப்படுது. முக்கிய முடிவுகள் எடுக்கும் தலைமை இடங்களில் எங்களிலிருந்து இருவரை நியமித்து பிரச்னைகளை கேட்டு தெரிந்து செயல்படவேண்டும் என்பது இந்த சமூகத்தின் அரசின் கடமையாகும்.
திருநர்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கப்பட்டால் மட்டுமே அவர்களுக்கான மாற்றம் நிகழும். அதே போன்று திருநர்களை உள்ளடக்காமல் பேசப்படும் பெண்ணியம் தீவிரவாதத்திற்கு சமம். திருநர்களின் விடுதலை தான் முழுமையான பெண் விடுதலையாகும்” என்கிறார் கவிஞர் மரக்கா.
மேலும் தன் வகுப்பு மாணவர்கள் தனக்கு எழுதிய கடிதங்களை பகிர்ந்துகொண்டபோது அதில் ஒரு மாணவி, “மரக்கா டீச்சர் நீங்க எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்” என்று எழுதியதை பகிர்ந்துகொண்ட தருணம் அரங்கத்தை நெகிழவைத்தது என்றே சொல்லவேண்டும்.
இது போன்ற பல சிந்தனைகளையும் அடுத்த தலைமுறையினரிடம் எடுத்து சென்றது என்பது பாராட்டுக்குரியது. மேலும் தன் உரையின் முடிவாக தன் வகுப்பில் மாணவர்களுக்கு சொல்லித்தரப்படும் சமச்சீர் பாட புத்தகத்தின் முன் பக்கம் இருக்கும் “தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனித நேயமற்றது” என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க அவருடைய உரையை முடித்தார்.
மேலும் அவருடைய வானவில்லே மறையாதிரு என்னும் கவிதை நூலில் இருந்த கவிதைகள் வாசிக்கப்பட்டது. இறுதியாக நிகழ்ச்சிக்கத் தலைமை தாங்கிய ஆசிரியர் கணேஷ், நன்றியுரை வழங்கினார். கவிஞர் மரக்கா மாணவர்களிடையே மரக்கா டீச்சராக பல பாடங்களை கற்றுக்கொடுத்தார்.