வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
இந்த வரிவிதிப்பு நடவடிக்கை பிப்ரவரி 4-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, வரிவிதிப்பு நடவடிக்கையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இதன்படி கடந்த 4-ந்தேதி மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை அமலுக்கு வந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம், கார் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரிவிதிப்பு நடவடிக்கை ஏப்ரல் 2-ந்தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பான நிர்வாக கோப்புகளில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமுடன் பேசிய பிறகு, வரிவிதிப்பில் இருந்து மெக்சிகோ பொருட்களுக்கு ஏப்ரல் 2-ந்தேதி வரை விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து கனடா பொருட்களுக்கும் வரிவிதிப்பில் இருந்து ஏப்ரல் 2-ந்தேதி வரை விலக்கு அளிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார். பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி, பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் அமெரிக்க ஆட்டோமொபைல் முன்னணி நிறுவனங்களின் தலையீடு ஆகியை காரணமாக டிரம்ப் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.