சிரியாவில் அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் இடையே மோதல் – 200 பேர் பலி

பெய்ரூட்,

சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அங்குள்ள கடற்கரையை ஒட்டியுள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று அரசு படைகள் திடீரென நுழைந்தன. பின்னர் கண்ணில் பட்ட ஆசாத்தின் ஆதரவாளர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் மிக மோசமான வன்முறையை ஏற்படுத்தி வருகின்றன. 14 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியாவை ஒன்றிணைக்க புதிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் இந்த மோதல் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதன்படி கிராமங்களில் நடந்த பழிவாங்கும் தாக்குதல்களில் சுமார் 140 பேர் கொல்லப்பட்டதைத் தவிர, இறந்தவர்களில் குறைந்தது 50 சிரிய அரசுப் படைகளும், 45 முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவினரும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது.

அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் இடையே நடந்த மோதலால் அங்கு நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.