மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்ேவறு நகரங்களில் நடந்து வருகிறது.இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது முதுகில் காயமடைந்தார்.
காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் தவற விட்டார்.
தற்போது அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமில் காயத்திலிருந்து மீண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் இல்லாததால் நடப்பு சீசனில் மும்பை அணி 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதனால் இவரது வருகையை மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா மும்பை அணியுடன் இணய இன்னும் கால தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி பெங்களூருக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இது மும்பை அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் அவர் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பும்ரா முழு உடற்தகுதியை எட்டினால் மட்டுமே ஐ.பி.எல். தொடரில் விளையாட பி.சி.சி.ஐ. அனுமதி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.