அயோத்தி: ‘ராம நவமி’ தினத்தை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலின் குழந்தை ராமர் சிலையின் நெற்றியின் மீது சூரிய ஒளி திலக வடிவில் படர வைக்கப்பட்டது.
ராம நவமி தினத்தில் சரியாக நண்பகல் 12 மணிக்கு சூரிய திலக தரிசனம் நிகழ்கிறது. அப்போது, சூரிய ஒளியின் கதிர்கள் குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் துல்லியமாக செலுத்தப்பட்டு, தெய்வீகமான வகையில் திலக வடிவில் படர வைக்கப்பட்டது. அப்போது குழந்தை ராமருக்கு சிறப்பு ஆராதனையை மேற்கொண்டனர் ராமர் கோயில் அர்ச்சகர்கள்.
விஞ்ஞான முறையில் ராமர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் மூலம் இணைக்கப்பட்ட விரிவான அமைப்பின் மூலம் குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி படரவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சுமார் மூன்று நிமிடங்கள் சூரிய ஒளி குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் படர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ராம நவமி அயோத்தி ராமர் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குழந்தை ராமருக்கு சிறப்பு நைவேத்தியங்கள் படையலிடப்பட்டன. கடந்த ஆண்டு ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல கோடி ரூபாய் செலவில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.