"சென்னை பத்திரிகையாளர் மன்ற உட்கட்டமைப்பு வசதிக்காக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு" – உதயநிதி அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பத்திரிக்கையாளர் மன்றமும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி முடித்திருக்கிறது. முன்னதாக, இத்தொடருக்கான அறிவிப்பில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 1 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ, 50,000-மும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 25,000-மும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வெற்றிபெற்ற எம் நாடு அணியினர்
வெற்றிபெற்ற எம் நாடு அணியினர்

இதில், ஒரு பெண்கள் அணி உட்பட மொத்தம் 52 அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் முறையில் நடைபெற்ற இந்தத் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளிலும், இரண்டாம் சுற்று ஆட்டங்கள் மார்ச் 22, 23 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மார்ச் 29-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் எம் நாடு டிவி அணியும், சத்தியம் டிவி ஸ்டார்ஸ் அணியும் மோதின. இதில், எம் நாடு டிவி அணியினர், சத்தியம் டிவி ஸ்டார்ஸ் அணியினரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர். இரண்டாம் இடத்தை சத்தியம் டிவி ஸ்டார் அணியும், மூன்றாம் இடத்தை புதிய தலைமுறை டிவி அணியும் பிடித்தன.

அடுத்த நாளே பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அதை ஒத்திவைப்பதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிவித்தது. இந்த நிலையில், கிரிக்கெட் தொடரில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற எம் நாடு டிவி அணியினருக்கு பரிசுத்தொகையும், வெற்றிக்கோப்பையும் வழங்கி கவுரவித்தார்.

உதயாநிதியுடன் வெற்றிபெற்ற எம் நாடு அணியினர்
உதயாநிதியுடன் வெற்றிபெற்ற எம் நாடு அணியினர்

இவருடன் சிறப்பு விருந்தினர்களாக, காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், திமுக எம்.பி தயாநிதி மாறன், இந்தியன் ஆயில் மாநில தலைவர் அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ நடுநிலையோடு பாரபட்சம் பார்க்காமல் உண்மையோடு செய்திகளை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பது நீங்கள்தான். விளையாட்டுப் போட்டிகளின்போது நம் உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவை திடமாகிறது. நம் அரசு அமைந்தவுடன் நலவாரியம் அமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வாரியம் மூலமாக 11 லட்சம் ரூபாய் அளவிற்கு அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறோம். பத்திரிக்கையாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ. 5,000-லிருந்து ரூ. 6,000 உயர்த்தி கொடுத்துள்ளோம். பத்திரிக்கையாளர்களுடய குடும்ப உதவி நிதி ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் ரூ. 10 லட்சமாக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.

உதயநிதி
உதயநிதி

கொரானா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 2 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இலவச பேருந்து பயணம் மற்றும் செய்தியாளர் அங்கீகார அட்டை போன்றவை என ஏராளமானவற்றை நமது அரசு செய்து வருகிறது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பு வசதிக்காக நமது அரசு சார்பாக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.