MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK – ஓர் அலசல்

‘சென்னை தோல்வி!’

வான்கடேவில் மும்பைக்கு எதிரான போட்டியில் தோற்றிருக்கிறது சென்னை அணி. தோல்வி ஒன்றும் புதிதில்லை. நடப்பு சீசனில் சென்னை அணியின் 6 வது தோல்வி இது. ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்க சென்னை அணி மும்பையை வீழ்த்தியே ஆக வேண்டிய சூழல் நிலவியது.

Dhoni
Dhoni

அப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் சென்னை அணி தோற்றதற்கு அந்த அணியின் கேப்டன் தோனி எடுத்த சில மோசமான முடிவுகளுமே காரணமாக இருந்தது. அதைப் பற்றிய ஓர் அலசல் இங்கே.

டெவால்ட் ப்ரெவிஸ் எங்கே?

குர்ஜப்னீத் சிங் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக அதிரடி வீரரான டெவால்ட் ப்ரெவிஸை சென்னை அணி மாற்று வீரராக ஒப்பந்தம் செய்திருந்தது. டெவால்ட் ப்ரெவிஸை சென்னை அணி தேடிச் சென்றதற்கே ஒரு காரணம் இருக்கிறது. தோனியை தவிர சென்னை அணியின் பேட்டர்கள் யாராலும் எளிதில் சிக்சர் அடிக்கவே முடியவில்லை.

Dewald Brevis
Dewald Brevis

இதனால் மிடில் ஓவர்களில் சென்னை அணி ரொம்பவே மந்தமாகத்தான் பேட்டிங் ஆடி வருகிறது. 7-15 இந்த ஓவர்களில் சென்னை அணியின் ரன்ரேட்டுமே மட்டமாகத்தான் இருக்கிறது. இதை மனதில் வைத்துதான் டெவால்ட் ப்ரெவிஸை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தார்கள். அவரால் துடிப்பாக சிக்சர்கள் அடிக்க முடியும். ஒரு பிரச்னை இருக்கிறதென உணர்கிறார்கள்.

அதை தீர்க்க ஒருவரை அழைத்து வருகிறார்கள். ஆனால், அழைத்து வந்தவருக்கு வாய்ப்புக் கொடுக்காமல் பென்ச்சில் வைப்பதா? இன்றைய போட்டியில் துபேவும் ஜடேஜாவும் அரைசதம் அடித்தார்கள்தான். ஆனால், அது நவீன டி20 க்கான ஆட்டமாக இல்லை. ஆரம்பத்தில் கடுமையாகத் திணறினார்கள்.

Jadeja
Jadeja

நிறைய டாட்கள் ஆடினார்கள். 26 பந்துகளுக்கு மேல் தொடர்ச்சியாக பவுண்டரியே இல்லாமல் இருந்தது. இந்தக் கட்டத்தில் டெவால் ப்ரெவிஸ் இருந்திருந்தால் ஒரு சில பெரிய சிக்சர்களை பறக்கவிட்டிருப்பார். குறைந்தபட்சமாக ஒரு 20 ரன்கள் அதிகமாக வந்திருக்கக்கூடும். அணித்தேர்விலேயே தோனி தவறிழைத்துவிட்டார்.

அஷ்வின் எதற்கு?

அஷ்வின் ப்ளேயிங் லெவனில் இல்லை. இம்பாக்ட் ப்ளேயராக அழைத்து வரப்பட்டார். இந்த முடிவையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அஷ்வின் பார்மிலேயே இல்லை. அவரால் தேவைப்படும் வேளையில் விக்கெட்டே எடுக்க முடியவில்லை. அப்படியிருக்க, எதனால் அஷ்வினை இம்பாக்ட் ப்ளேயராக எடுத்து வர வேண்டும்.

Dhoni
Dhoni

பிட்ச் ஒன்றும் அவ்வளவு அதிகமாக ஸ்பின்னுக்கு உதவவில்லையே. அஷ்வினை இம்பாக்ட் ப்ளேயராக கொண்டு வர, பவர்ப்ளேயில் செட் ஆகியிருந்த ஒரு பௌலிங் கூட்டணியையும் தோனி உடைத்தார். அன்ஷூல் கம்போஜ் கடந்த போட்டியில் கலீல் அஹமதுவுடன் இணைந்து நன்றாக பந்துவீசியிருந்தார்.

அபாயமான வீரரான பூரனின் விக்கெட்டையே அவர்தான் எடுத்துக் கொடுத்தார். அவரை இம்பாக்ட் ப்ளேயராக கொண்டு வராமல் விட்டது பெரும் தவறு. தோனி செய்யும் தவறுகள் ஒரு சங்கிலி பிணைப்பைப் போல தொடர்வதையும் பார்க்க முடிகிறது. ஓவர்டனுக்கு பதில் டெவால்ட் ப்ரெவிஸ் எடுக்கப்பட்டிருந்தால் ஓவர்டன் பவர்ப்ளேயில் பந்துவீச இருந்திருக்கவே மாட்டார்.

Ashwin - Dhoni
Ashwin – Dhoni

அஷ்வினுக்கு பதில் அன்ஷூல் கம்போஜ் வந்திருக்கும்பட்சத்தில் பவர்ப்ளேயில் கலீலுடன் சேர்ந்து அவர் இன்னும் சிறப்பாக வீசியிருப்பார். இதெல்லாம் நடக்கவில்லை. விளைவு, பவர்ப்ளேயில் சென்னை அணிக்கு விக்கெட்டும் கிடைக்கவில்லை. மும்பை அங்கேயே போட்டியை கைக்குள் கொண்டு வந்துவிட்டது. பார்மிலேயே இல்லாத ரோஹித் பார்முக்கு வந்துவிட்டார்.

சுமாரான பௌலிங் ரொட்டேஷன்:

ருத்துராஜின் பௌலிங் ரொட்டேஷன் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்திருந்தது. இன்று தோனி ருத்துராஜை விஞ்சும் அளவுக்கு ரொம்ப சுமாராக பௌலிங் ரொட்டேஷன் செய்தார். விக்கெட்டே எடுக்காத அஷ்வினை ஏன் பிரதான பௌலராக நினைக்க வேண்டும்? அவருக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Dhoni
Dhoni

7-8 வருடங்களுக்கு முன்புள்ள அஷ்வின் என்றால் கூட ஒத்துக்கொள்ளலாம். இப்போதுள்ள அஷ்வின் ஸ்ட்ரைக்கிங் பௌலர் கிடையாது. அப்படியிருக்க ஸ்பின்னருக்கு பந்தைக் கொடுக்க வேண்டுமென்றாலே அவரை தேடியே செல்வது ஏன்? இன்று பவர்ப்ளேக்குள்ளாகவே அஷ்வின் வந்துவிட்டார். ரன்கள் குறைவாகக் கொடுத்தபோதும் வெற்றிக்குத் தேவைப்பட்ட விக்கெட் கிடைக்கவில்லை என்பது தான் சோகம். ஆனால், அணியின் விக்கெட் டேக்கிங் பௌலரான நூர் அஹமதை 10 வது ஓவரில்தான் தோனி அறிமுகப்படுத்துகிறார்.

முதல் 9 ஓவர்களிலேயே 88 ரன்களை மும்பை எடுத்துவிட்டது. போட்டியை மும்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. அப்போது அவர் கையில் பந்தை கொடுத்து முதல் ஓவரைத் தவிர மற்ற ஓவர்களிலெல்லாம் அடிதான் வாங்கினார். ஏனெனில், மும்பைக்கு எந்த அழுத்தமும் இல்லை. இலகுவாக ஆடினார்கள். பதிரனாவையும் 14 வது ஓவரில்தான் அறிமுகப்படுத்தினார்கள்.

Dhoni
Dhoni

கிட்டத்தட்ட போட்டியே முடிந்துவிட்டது. அப்படியொரு நிலையில் பந்துவீச பதிரனா எதற்கு? ருத்துராஜ் செய்த அதே தவறை செய்ய தோனியும் எதற்கு? விக்கெட் எடுப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பார்மிலேயே இல்லாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ன மாதிரியான கேப்டன்சி என புரியவில்லை.

CSK வின் தோல்விக்குக் காரணமென நீங்கள் நினைக்கும் பாயின்ட்டைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.