புதுடெல்லி: ஹம்தர்த் நிறுவனத்தின் பிரபல பானமான ‘ரூஹ் அஃப்சா’-வை தாக்கி பாபா ராம்தேவின் பதஞ்சலி வெளியிட்ட சர்பத் ஜிகாத் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாபா ராம்தேவ், அவரது பதஞ்சலி நிறுவனத்தின் சர்பத் ஒன்றை அறிமுகப்படுத்தி வெளியிட்ட வீடியோ ஒன்றில் பிரபல சர்பத் பிராண்டான ரூஹ் அஃப்சாவை மத ரீதியாக தாக்கியிருந்தார். அந்த வீடியோவில் பதஞ்சலியின் ரோஸ் சர்பத்தை அறிமுகப்படுத்தி பேசிய ராம்தேவ், “சில நிறுவனங்கள் சர்பத் தயாரிக்கின்றன. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் மசூதிகளை உருவாக்கும். நமது செயல்பாடுகள் குருகுலங்களை உருவாக்கப்போகிறது.” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், ‘லவ் ஜிகாத்’ போல இது ‘சர்பத் ஜிகாத்’ என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரூஹ் அஃப்சாவைத் தயாரிக்கும் ஹம்தர்த் நிறுவனம் பாபா ராம்தேவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
ராம்தேவுக்கு எதிரான இந்த மனுவில் நீதிபதி அமித் பன்சால் கூறுகையில், “இது நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இது நியாயப்படுத்தவே முடியாதது” என்று தெரிவித்தார்.
வழக்கில் ஹம்தர்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “இது ஒரு அதிர்ச்சியூட்டும் வழக்கு. இது ரூஹ் ஆஃபசாவை இழிவுபடுத்துவது என்பதையும் தாண்டியது. பாபா ராம்தேவின் கருத்து வெறுப்பு பேச்சுக்கு சமமானது” என்று வாதிட்டார்.
சிறிய இடைவேளைக்கு பின்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாபா ராம்தேவ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் நாயர், எனது கட்சிக்காரர் அந்த வீடியோக்களை உடனடியாக நீக்கி விடுவார்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் பாபா ராம்தேவ் எந்தவிதமான அறிக்கையோ, விளம்பரங்களோ அல்லது சமூக ஊடக பதிவுகளோ வெளியிட மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இன்னும் ஒருவார காலத்துக்குள் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை மே 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ரூஹ் அஃப்சா பானத்தை தயாரித்து வரும் ஹம்தர்த் நேஷனல் பவுண்டேஷன் (இந்தியா) நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக யுனானி மற்றும் ஆயுர்வேத மருந்துகள், எண்ணெய்கள், சிரப்கள் மற்றும் மது இல்லாத பானங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.